இருமுடிகட்டு – திரைப்பட விமர்சனம்
ஒரு கிராமத்தில் மனைவி பிரியாபவானிசங்கர் மற்றும் மகள் நட்சத்திரா ஆகியோருடன் வசித்துவருகிறார் நாயகன் ரவிதேஜா.பெரும் குடிகாரரான அவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுகிற நாட்களில் மட்டும் குடிக்கமாட்டார்.அதேநேரம் மகள் மீது பெரும்பாசம் கொண்டவர்.
தன் மகள் மட்டுமின்றி ஊரில் இருக்கும் எல்லாச் சிறுமிகளையும் மகள் போலவே நேசிக்கிறார்.ஒருகட்டத்தில் அந்தச் சிறுமிகளுக்குக் கொடுமை நடக்கிறது.அதில் வெகுண்டெழும் நாயகன் என்ன செய்கிறார்? எப்படிச் செய்கிறார்? என்பதைச் சொல்லியிருக்கும் படம் இருமுடிகட்டு.
நாயகனாக நடித்திருக்கும் ரவிதேஜா,கிராமத்து வெள்ளந்தி மனிதர் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.அதோடு குடிகாரர் வேடத்துக்கும் அட்சரசுத்தமாகப் பொருந்துகிறார்.முதல்பாதியில் அமைதியானவராகத் தோன்றி அடுத்தபாதியில் விஸ்வரூபம் எடுக்கிறார்.அவருடைய நாயகபிம்பம் இந்தக் கதைக்குப் பெரும் உதவியாக அமைந்திருக்கிறது.
ரவிதேஜாவின் மனைவியாக நடித்திருக்கும் பிரியாபவானிசங்கர்,அமைதியான அன்பான குடும்பத்தலைவியாகவே மாறியிருக்கிறார்.
ஐயப்பன்பக்தராக,குருசாமியாக நடித்திருக்கும் சாய்குமார்,அவருடைய பிம்பத்துக்கு நேர்மாறாக அமைதியும் அன்புமாக இருக்கிறார்.அவரை இப்படி ஒரு வேடத்தில் நடிக்க வைத்திருப்பதற்கான பிற்பாதியில் இருக்கிறது.அந்தக்காட்சிகள் அதிர வைக்கின்றன.
ரவிதேஜாவின் மகளாக நடித்திருக்கும் நட்சத்திரா,படத்தின் தூண்போல் இருக்கிறார்.அந்தச் சிறுமியின் சிரிப்பு குறும்பு விளையாட்டு துணிச்சல் ஆகியன பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கிறது.
சுவாசிகா இப்படி ஒரு வேடத்தை ஏன் ஏற்றுக்கொண்டார்? என்று எண்ணுகிற மாதிரியான வேடத்தை ஏற்று அதிலும் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணுசர்மாவின் ஒளிப்பதிவில் கண்களுக்கு அழகான கிராமத்துக்காட்சிகள்,இதயத்தைப் பதறவைக்கும் அதிரடிக் காட்சிகள் ஆகியன சரியாகப் பதிவாகியிருக்கின்றன.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ஐயப்ப பக்தர்களுக்கான பாடல் உட்பட எல்லாப் பாடல்களும் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையில் தன் திறமையை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிரவின்புடி படத்தை சலிப்பில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்.
அனலரசுவின் சண்டைக்காட்சிகள் வியக்க வைத்திருக்கின்றன.
தெலுங்கில் எடுக்கப்பட்ட படமென்றே தெரியாத வண்ணம் தமிழில் வசனங்களை எழுதியிருக்கிறார் இயக்குநர் விஜய்பாலாஜி.
எழுதி இயக்கியிருக்கும் ஷிவாநாராயணா,எடுத்துக்கொண்ட கதையில் புதுமை இல்லையெனினும் தேர்ந்தெடுத்த நடிகர்கள் அவர்களிடம் செய்திருக்கும் மாற்றங்கள் ஆகியனவற்றோடு திரைக்கதை மற்றும் வசனங்களில் படத்தைப் புதிதாக்கியிருக்கிறார்.பக்தியை தலைப்பில் வைத்திருந்தாலும் படத்தில் சொல்லப்பட்ட்டிருப்பது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கானதாக அமைந்திருக்கிறது.
– முருகன்














