ரியோராஜின் படத்துக்கு அடுத்த சோதனை – படக்குழு தவிப்பு
நடிகர் ரியோராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராம் இன் லீலா’.அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.இதில்,ரியோ ராஜுடன் அறிமுக நாயகி வர்திகா ஜெயின்,சேத்தன்,முனிஷ்காந்த்,மாளவிகா அவினாஷ்,மாகாபா ஆனந்த் மற்றும் தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்துக்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஈவா என்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.
நடுத்தர வர்க்கத்து இளைஞனான ராம்,திருமணத்திற்காகப் பெண்தேடி பலமுறை நிராகரிக்கப்படுகிறான்.அவன் வாழ்வில் ‘லீலா’ என்ற பெண் வந்தவுடன் காதல் மலர்கிறது.ஆனால்,லீலாவிற்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வரக்கூடாது அல்லது பார்க்கக்கூடாது என்ற ஒரு வித்தியாசமான நிபந்தனையும் மர்மமும் உள்ளது.இதைச்சுற்றி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
இப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இப்படம்,ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அப்படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
என்ன சிக்கல்?
இப்படத்தை தணிக்கைச் சான்று பெறுவதற்காக தணிக்கை வாரியத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.அங்கு அவர்கள் இந்தப்படத்தின் பெயரில் ராம் என்றிருப்பதை அனுமதிக்கமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.திடுக்கிட்டுப் போன படக்குழு,படத்தின் கதாநாயகனின் பெயர் ராம் நாயகியின் பெயர் லீலா என்பதால் இந்தப்பெயர் வைத்திருக்கிறோம் என்று விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால்,அந்த விளக்கத்தை ஏற்காமல் ராம் என்பது கடவுளைக் குறிப்பது அவர் பெயரை வைத்துக்கொண்டு இப்படி ஒரு படம் வருவதை அனுமதிக்கமுடியாது என்று தணிக்கை வாரியத்தினர் உறுதிபடச் சொல்லிவிட்டார்களாம்.
மலையாளம்,தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் இதேபெயரில் முந்தைய ஆண்டுகளில் படங்கள் வந்திருக்கின்றன என்கிற சான்றுகளையும் தணிக்கை வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால்,படத்தின் பெயரை மாற்றியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்துக்குப் படக்குழு ஆளாகியுள்ளது என்று சொல்கிறார்கள்.
இப்போது தலைப்பில் இருக்கும் ராம் என்கிற பெயருக்குப் பதிலாக ரகு என்று வைத்து ரகுவின் லீலா என்று பெயர் வைத்து விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார்கள்.
அதையும் தணிக்கை வாரியம் நிராகரித்துவிட்டதாம்.ஏனெனில்? ரகு என்பதும் ராமர் குடும்பத்தைக் குறிக்கும் பெயர்தான்.அவரை ரகுவம்சம் என்றுதான் சொல்வார்கள்.எனவே,இதையும் ஏற்கமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.
இதைச் சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் பேரரதிர்ச்சியாகியிருக்கிறார்கள்.ஆனாலும் தணிக்கை வாரியத்தை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாதே?
அதனால்,நான்கைந்து பெயர்களைச் சொல்கிறோம் அவற்றில் எது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நீங்களே சொல்லுங்கள்,அந்தப் பெயரை வைத்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தார்களாம்.
விடுமுறைநாட்கள் முடிந்து நாளை அலுவலகம் திறந்தவுடன்,புதிய பெயர்களைச் சொல்லி தணிக்கை வாரியத்தின் சம்மதம் வாங்கி அதன்பின் அவர்கள் சொல்லும் பெயரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதியவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 21 அன்று வெளியீடு என்று அறிவித்த படத்துக்கு ஆகஸ்ட் 16 வரை சோதனை.
அதுமட்டுமின்றி, இந்திய திரையுலக வரலாற்றிலேயே ஒரு படத்தின் பெயரை தணிக்கை வாரியம் தேர்ந்தெடுப்பது இதுவே முதல்முறையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.










