செய்திக் குறிப்புகள்

இயக்குநர் இளன் இன்னொரு பாக்யராஜ்சார் – நடிகர் செந்தில் புகழ்ச்சி

ஹரீஷ்கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல்,கவின் நடித்த ஸ்டார் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் இளன்.இவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’.

இளன் இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.அவருடன் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்க,ராதிகா சரத்குமார்,யோகி பாபு,எம்.எஸ். பாஸ்கர்,கீதா கைலாசம்,இளங்கோ குமரவேல்,செந்தில்,மாறன்,டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம்,திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல விரும்பாத மனைவியுடன் கணவரும் மனைவியின் வீட்டிலேயே சென்று வசிக்கும் சூழலை மையமாகக் கொண்டுள்ளது.இதன்மூலம் திருமண வாழ்க்கை,குடும்ப உறவுகள்,காதல்,எதிர்பார்ப்புகள் மற்றும் அதனால் உருவாகும் நகைச்சுவையான சம்பவங்களை புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கிறது

இந்நிலையில்,இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது….

ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே நிறைய தைரியம் வேண்டும்.அந்தத் தைரியம் இளனிடம் இருக்கிறது.அவருக்கும், அவருடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.இப்படம் டிரெய்லர் நன்றாக இருக்கிறது.இந்தப்படம் நிறைய ஃபன் ஆன விசயங்களையும்,சில நெருக்கமான தனிப்பட்ட விசயங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது.இந்தப்படம் அனைவருக்கும் பிடித்து,நல்லவெற்றியைப் பெறவேண்டும் என்று நம்புகிறேன்.மீண்டும் படக்குழுவினருக்கும்,நெட்ப்ளிக்ஸுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
டிரெய்லரில் இந்த சில நிமிடங்களிலேயே நம்மை நிறைய சிரிக்க வைக்கும் விசயங்கள் இருந்தது.நான் நிறைய கூச்சசுபாவம் கொண்டவன் என்னையே ஸ்டார் இரண்டு ஷாட்தான் என்று கூறி நடிக்கவைத்தார்.அதில் அவர் மீது கோபம்தான்.இப்போது அவரே நடிகராகி விட்டார்,படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

நடிகை ராதிகா பேசியதாவது….

முதலில் இந்தப்படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அதுவும் படம் என் பிறந்தநாளன்று வெளியாகிறது.இது எனக்கு ஒரு நல்ல பிறந்தநாள் பரிசாக அமைந்திருக்கிறது.அதனால் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.
இது ஒரு வித்தியாசமான காதல்கதையாக உருவாகியுள்ளது.அதேநேரத்தில் இதை குடும்பப்படம் என்று சொல்லமுடியாது.இன்றைய சமூகத்தில் ஒவ்வொருவருடைய மனநிலையும்,வாழ்க்கையைப் பற்றிய பார்வையும் எப்படி மாறியிருக்கிறது என்பதையும்,அந்த மாற்றத்துக்கு ஏற்ப அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதையும் இப்படம் பேசுகிறது.
குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு காதல்,திருமணம்,வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய பார்வை முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. அவர்களுடைய எண்ணங்களை நாங்கள் எப்படி புரிந்துகொள்கிறோம்,அதை எப்படி ஏற்றுக்கொள்கிறோம்,அந்த மாற்றங்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
படத்தில் பல விசயங்களை மிகவும் நேர்மையாகக் கையாண்டிருக்கிறோம்.அதனால் படம் சிறப்பாக வந்திருக்கிறது.இயக்குநர் இளன் சிறப்பாக இயக்கி நடித்திருக்கிறார்.கண்டிப்பாக அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றார்.

நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது….

இந்தப்படத்தைப் பார்க்கும்போது,‘நமக்கும் இதுபோல ஒரு மாமனார் கிடைக்கவேண்டும்’ என்று எல்லோரும் எதிர்பார்க்கும் அளவுக்கு, மாமனார் கதாபாத்திரத்தை மிகவும் அழகாக அமைத்திருக்கிறோம்.இந்தக் கதாபாத்திரம் இரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் என்று நம்புகிறேன்.இயக்குநர் என்னை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.அனைவரும் இப்படத்தை இரசிப்பார்கள் நன்றி என்றார்.

நடிகர் செந்தில் பேசியதாவது..,

இந்தப்படத்தில் நடிகர் இளன் எப்படி இருக்கிறார்,என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, நம்முடைய பாக்யராஜ் சார் நடித்த படங்களைப் பார்த்திருப்போம்.அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்தப்படத்தில் இளன் நடித்திருக்கிறார்.அவரைப்போல திரைக்கதையிலும் இயக்கத்திலும் கலக்கியிருக்கிறார்.அவரைப் பார்க்கும்போது எனக்கு இன்னொரு பாக்யராஜ் சார் மாதிரி தோன்றியது. .
அதேபோல்,இந்தப்படத்தில் நடித்திருக்கும் கதாநாயகியும் மிகவும் இயல்பாக இருக்கிறார்.அவருடைய தோற்றமும் நடிப்பும் மிகவும் இயற்கையாக இருக்கிறது.அவரை நான் மிகவும் பாராட்டினேன்.
இந்தப்படத்தில் பணியாற்றியிருக்கும் அனைவருமே என் கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் என்பதால்,படத்தின் மீது இன்னும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.நான் டிரெய்லரைப் பார்த்தேன்.அதில் வரும் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன.இந்தப்படம் மிகச்சிறப்பாக வர வாழ்த்துகள்.நன்றி என்றார்.

நடிகர் யோகிபாபு பேசியதாவது….

இளன்,இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு முதலில் நன்றி.இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘ஸ்டார்’ படத்தில் இருந்தே நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம்,‘சார், நாம கண்டிப்பாக ஒருபடம் பண்ணுவோம்’ என்று இளன் என்னிடம் கூறியிருந்தார்.அந்த வார்த்தையை இப்போது நிறைவேற்றி,இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு மிகவும் நன்றி.
அடுத்து நாங்கள் இணைந்து செய்யப்போகும் இன்னொரு படம் இருக்கிறது.அதில் நீங்கள் கேட்கும் வாட்ஸ்அப்,யூடியூப் உள்ளிட்ட விசயங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் அந்தக் கான்செப்ட் மிகவும் நன்றாக வந்துள்ளது.அதற்காகவும் நன்றி.மிக்க நன்றி. அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நடிகை சான்வி மேக்னா பேசியதாவது..,

உண்மையாகச் சொன்னால்,ஆரம்பத்திலிருந்தே நான் இளன் அடிக்கடி ஒரு விசயத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பேன்.ஒரேநேரத்தில் எப்படி ஒரு படத்தை இயக்கவும்,அதில் நடிக்கவும் முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.ஏனென்றால்,எனக்கு அந்த அனுபவம் கிடையாது.
அதற்கு அவர்,‘நாம் நடிக்கும் காட்சிக்கு ஏற்ப முழுமையாக அதற்குள் சென்று நடிப்பேன்.அதேநேரத்தில் இயக்குநராக இருக்கும்போது என்ன செய்யவேண்டும் என்பதையும் தெளிவாக வைத்திருப்பேன் என்று சொல்வார்.
ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு முக்கியமான உணர்வுப்பூர்வமான காட்சி இருந்தது.அந்தக்காட்சிக்கு முன்பு அவர் மிகவும் பதற்றமாக இருந்தார்.நான் அவரிடம்,‘ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கிறீர்கள்?’என்று கேட்டேன்.அதற்கு அவர்,‘நான் நடிகராக என்னுடைய முகத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.ஆனால்,அடுத்ததாக என்ன காட்சியைப் படமாக்கவேண்டும் என்பதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது’என்றார்.
அதன்பிறகு அவர் ஒருபோதும் அந்த விசயத்தைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை.ஆனால், படம் முழுவதும் அவருடைய செயல்பாட்டைக் கவனித்தபோது,இயக்குநர் நிலையிலிருந்து நடிகர் நிலைக்கும்,நடிகர் நிலையிலிருந்து மீண்டும் இயக்குநர் நிலைக்கும் அவரால் மிக எளிதாக மாற முடிந்ததைப் பார்த்தேன்.
அவருக்கு அந்த அளவுக்கு சிறந்த புரிதலும்,பிரசன்ஸ் ஆஃப் மைண்டும் இருக்கிறது.இந்தப்பயணத்தில் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விசயங்களில் இதுவும் ஒன்று.மேலும்,இந்தப்படத்தில் நான் முழுமையாக தமிழில்தான் டப்பிங் பேசியிருக்கிறேன்.இந்தப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம்.கண்டிப்பாக எங்களைப்போல இரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள் நன்றி என்றார்.

நடிகர்,இயக்குநர் இளன் பேசியதாவது..,

இப்படம் எனக்கும் மிகவும் முக்கியமான படம் இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் களமிறங்கியிருக்கிறேன்.இன்றைய இளைஞர்கள் இரசிக்கும்படியான ஒரு கதையைச் சொல்லியிருக்கிறேன்.திரை ஆளுமைகள் ராதிகா மேம்,செந்தில் சார் எல்லோரும் என்னை நம்பி இப்படத்தில் நடித்துள்ளார்கள் அவர்களுக்கு என் நன்றிகள்.
முக்கியமாக யுவன் சார் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.அவர் இசை படத்திற்கு பெரும் பலம்.“‘அட்ராசிட்டி’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.இந்தப்பாடலை உருவாக்கிய விதமும்,அதன் பின்னால் இருக்கும் யோசனையும் மிகவும் வித்தியாசமானது.இந்தப்படத்தின் முதல்பாடலாக ‘அட்ராசிட்டி’ வெளியாகி இரசிகர்களிடம் நல்லவரவேற்பைப் பெற்று வருகிறது.
பாடல் மற்றும் படத்தைப்பற்றி அதிகமாகச் சொல்லி,இரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைக்க நான் விரும்பவில்லை.அவர்கள் படத்தைப் பார்த்து,அதில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களையும்,சம்பவங்களையும் தங்களுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
இந்தப்படத்தின் உருவாக்கப் பயணம் எனக்கு மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருந்தது.ஒவ்வொரு விசயத்தையும் மிகவும் கவனமாகச் செய்திருக்கிறோம்.அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது..,

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தொடங்கிய ஒரு விசயம் இப்போதும் தொடர்கிறது.பொதுவாக ஒருபடத்தின் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத்தான் அறிவிப்பார்கள்.ஆனால் படம் முடியும் நேரத்தில் 13,14 டிராக்குகள் இருக்கும்.‘பியார் பிரேமா காதல்’ படத்தில் முதலிலேயே முழுடிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம்.அதேமாதிரியான விசயத்தை இந்தப்படத்திலும் செய்திருக்கிறோம்.
இது இப்போது இளனுடன் இணைந்த ஒரு ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது.பாடல்கள் தொடர்ந்து வெளியாகி,சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்தப்பாடலுக்கு இரசிகர்களிடமிருந்து வரும் அனைத்து ரியாக்சன்களும் மிகவும் பாசிட்டிவாக இருக்கின்றன.நான் கமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.இரசிகர்கள் காட்டும் அன்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும்,இந்தப்படத்தை நான் முழுமையாகப் பார்த்துவிட்டேன்.படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது.ஒரு நல்ல என்டர்டெயினராக இருக்கிறது.குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து இரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்.
இந்தப்படம் இரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெறும் படமாகவும்,மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது.அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

.

Related Posts