கமலுக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பினார் மணிரத்னம்? – பரபர தகவல்
2025 ஜூன் 5 ஆம் தேதி வெளியான படம் தக்லைஃப்.கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் அப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தை,கமலின் ராஜ்கமல் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இப்படத்தை இவர்களுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்கியது.
இவற்றில்,இப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் படத்தைத் தயாரிப்பதென்றும் அதற்கான செலவுத்தொகையை ராஜ்கமல் நிறுவனம் கொடுத்துவிட வேண்டும் என்பது ஒப்பந்தம் என்று சொல்லப்பட்டது.
அதன்படி ராஜ்கமல் நிறுவனம் நடந்துகொள்ளவில்லை என்றும் அதாவது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கவேண்டிய தொகையை முழுமையாகக் கொடுக்கவில்லை என்கிற தகவல் திரையுலகில் இருந்துகொண்டிருந்தது.
அதேநேரம்,கமலும் மணிரத்னமும் நடிகர் இயக்குநர் என்பதைத் தாண்டி நெருங்கிய உறவினர்கள் என்பதால் அவர்களுக்குள் அப்படி ஒரு சிக்கல் இருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்பட்டது.படம் ஓடவில்லை என்பதால் இப்படிப்பட்ட தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன என்றும் கூறினார்கள்.
இப்போது மீண்டும் அச்சிக்கல் குறித்து பரபரப்பான தகவல்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அவை என்ன?
தக்லைஃப் படத்தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தப்படி ராஜ்கமல் நிறுவனம் நடந்துகொள்ளவில்லை என்பதால் மணிரத்னம் மிகவும் கோபமாக இருந்திருக்கிறார்.அதோடு,இதுதொடர்பாகப் பேச பலமுறை அழைத்தும் ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து எந்தப்பதிலும் இல்லை என்பதோடு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் அழைப்புகளை எடுக்காமல் புறக்கணித்து வந்தது என்றும் சொல்லப்படுகிறது.
இதனால்,பொறுத்தது போதும் என்கிற மனநிலைக்கு வந்த மணிரத்னம்,இதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்கிற திடமுடிவை எடுத்து ராஜ்கமல் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.தரவேண்டிய தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் தரவில்லையெனில் வழக்கு தொடரப்படும் என்று அதில் சொல்லியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது உண்மையா? வதந்தியா? என்கிற கேள்வி விசயத்தை அறிந்த அனைவருக்கும் இருக்கிறது.
இதுகுறித்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர் சிவா ஆனந்திடம் கேட்டபோது,இப்படி ஒரு தகவலே நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.இது முற்றிலும் ஆதாரமற்ற வெற்றுவதந்தி.இதை நம்பவேண்டாம் என்றார்.
செய்தியாக இல்லாமல் வதந்தியாக இருந்தால் நல்லது.











