மூக்குத்தி அம்மன் 2 தள்ளிப்போகிறது – ஆர்.ஜே.பாலாஜி காரணமா?
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி,என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.அந்தப்படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ஆர்.ஜே.பாலாஜி,ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட்,மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.கிரிஷ் இசையமைத்திருந்தார்.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்திருந்தார்.
இப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன்காரணமாக இப்படத்தின் இரண்டாம்பாகத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இதிலும் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருக்கிறார்.அவருடன்,ஊர்வசி,சினேகா,துனியா விஐய்,ரெஜினா கசாண்ட்ரா,யோகி பாபு,
அபிநயா,இராமச்சந்திர ராஜு,சிங்கம்புலி,விச்சு விசுவநாத்,இனியா,நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்துக்கு ஹிப்ஹாப்தமிழா இசையமைத்திருக்கிறார்,கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்கிறார்.சுந்தர்.சி எழுதி இயக்கியிருக்கிறார்.
இப்படம் வரும் தீபாவளி நாளையொட்டி நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்தவாரம் அதாவது செப்டம்பர் 14 அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு,படத்தின் குறுமுன்னோட்டத்தையும் வெளியிட்டிருந்தார்கள்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி உட்பட ஐந்து மொழிகளில் குறுமுன்னோட்டத்தை வெளியிட்டிருந்தார்கள்.
ஆனால்,இப்போது தீபாவளிக்கு அந்தப்படம் வெளியாகாது என்று சொல்லப்படுகிறது.படத்தின் தொழில்நுட்பப் பணிகள் குறிப்பாக கணினிவரைக்கலைக் காட்சிகள் தொடர்பான வேலைகள் அதற்குள் முழுமையாக நிறைவடையாது என்பதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது என்பது படக்குழு வெளியில் சொல்லும் காரணமாக இருக்கிறது.
அதேசமயம்,உண்மைக்காரணம் அதுவல்ல என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படியானால் உண்மை என்ன என்றால்?
நிதேஷ் திவாரி இயக்கத்தில்,நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்திப்படம் இராமாயணா.இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இதுவும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 6 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப்படத்துடன் போட்டிபோட முடியாது என்பதால் மூக்குத்தி அம்மன் 2 படத்தைத் தள்ளி வைக்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.
இதுமட்டுமின்றி,மூக்குத்தி அம்மன் என்கிற பெயரை உருவாக்கி அதைப் படமாக எடுத்து வெற்றி பெற்றவர் ஆர்.ஜே.பாலாஜி.அவருக்கும் இந்தப்படத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை,இப்படத்தின் உரிமை முழுக்க தங்களிடமே இருக்கிறது என்று சொல்லித்தான் தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தைத் தொடங்கியது.ஆனால் சட்டப்படி இந்தப்படத்தின் உரிமை தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜியிடம் உள்ளவற்றைப் பயன்படுத்தி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.அதைச் சரிசெய்ய கால அவகாசம் தேவை என்பதால் படத்தின் வெளியீட்டைத் தள்ளிப்போட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இவை வெளியில் உலவும் தகவல்கள்.உண்மை என்ன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.











