தி பாரடைஸ் – திரைப்பட விமர்சனம்
வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் உள்ளூர் கொள்ளைக்காரனிடமிருந்து விடுதலை கிடைக்காமல் தவிக்கும் சவாரி எனும் இனமக்களில் ஒருவராகப் பிறந்து அந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் போராளியைப் பற்றிய கதைதான் தி பாரடைஸ்.
முற்காலகட்டக் கதை என்பதால் நாயகன் நானி இரட்டை ஜடையுடன் வருகிறார்.காதல்,மோதல் ஆகியனவற்றில் வழக்கம்போலவே அடித்து ஆடுகிறார்.அவரைப் பற்றி படத்தில் கட்டமைக்கப்படுகிற பிம்பம், அவர் என்ன செய்தாலும் சரி என்கிற மனநிலைக்கு இரசிகர்களைக் கொண்டுபோய்விடுகிறது.
நாயகியாக கயாடு லோகர் நடித்திருக்கிறார்.இதுவரை தன் சிரிப்பால் மட்டுமே இளைஞர்களை ஈர்த்துக் கொண்டிருந்த அவரை இதுவரை இல்லாத வகையில் கவர்ச்சியாக நடித்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.
மோகன்பாபு வில்லனாக நடித்திருக்கிறார்.அவருடைய அனுபவ நடிப்பு மட்டுமின்றி முதுமையும் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
நானியின் அம்மாவாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்னியின் கதாபாத்திரம்,மக்சிம் கார்க்கியின் தாய் கதாபாத்திரத்தை ஒத்ததாக அமைந்திருக்கிறது.அவ்வளவு வலிமையான வேடத்தை தன் நடிப்பில் தாங்கிப்பிடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நானியின் நண்பராக நடித்திருக்கும் சம்பூர்னேஷ் பாபு,தணிகலபரணி,விஷிகா,கிருஷ்ண தேஜா,ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட நடிகர் நடிகையர் படத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறார்கள்.நடித்துமிருக்கிறார்கள்.
ஒரு பாடலுக்கு நடனமாடும் கீர்த்தி சுரேஷும் அந்தப்பாடலும் கவனம் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன.
சவாரி இன மக்கள் வாழும் நிலப்பரப்பு,வாழ்க்கை முறை ஆகியனவற்றை சரியாக அறிமுகப்படுத்தி,அதை முறையான வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய்.பல காட்சிகள் பிரமாண்டமாய் அமைந்து படத்தை வியந்து பார்க்க வைத்திருக்கிறது.
அனிருத் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் நாயகன் நானி மற்றும் நாயகி கயாடு லோகர் உள்ளிட்டோருக்கு ஏற்ப பாடல்கள் கொடுத்திருக்கிறார்.சும்மாவே பெரிதாகப் பின்னணி இசை கொடுப்பார் அனிருத்.இந்தப்படத்தில் இரத்த வெறியாட்டம் நடக்கிறது.அதற்கேற்ப பின்னணி அமைத்து அலற வைக்கிறார்.
படத்தொகுப்பாளர் நவீன் நூலி,கொஞ்சமும் தயங்காமல் பல காட்சிகளைத் தூக்கியிருக்கலாம்.அந்தக் காட்சிகளின் தரத்தில் விழுந்து அவற்றை நீக்காமல் விட்டிருக்கலாம்.ஆனால் மொத்தமாகப் பார்க்கும்போது பலவீனமாக அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த் ஓடெலா.அடிமைப்பட்டுக் கிடக்கும் ஓர் இனத்தை அறிமுகப்படுத்தி அதன் விடுதலைப் போராட்டம் எனும் அழுத்தமான கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அதேசமயம்,நாயகன் நானியை மையப்படுத்தியே திரைக்கதை மற்றும் சண்டைக்காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.அதனால் இரத்தத் தெறிப்பு அளவுக்கதிகமாக இருக்கிறது.
– இளையவன்












