சைக்கோ – திரைப்பட விமர்சனம்
கோயம்புத்தூரில் அடுத்தடுத்து 14 இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய தலையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு உடலை பொது வெளியில் காட்சிப்படுத்துகிறார் கொலைகாரர்.அந்தக் கொலைகாரரைக் கண்டுபிடிக்க முடியாமல் வருடக்கணக்கில் காவல்துறை திணறிக் கொண்டிருக்க கண் பார்வை தெரியாத கதாநாயகன் உதயநிதி ஏழு நாட்களுக்குள் கண்டுபிடிக்கிறார்.
அவர் யார்? ஏன் அப்படிச் செய்கிறார்? அவரை கண் தெரியாத கதாநாயகன் எப்படிக் கண்டுபிடித்தார்? என்பதைச் சொல்வதுதான் படம்.
உதயநிதி பார்வையற்றோர் வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் முன்னேறியிருக்கிறார்.
நாயகி அதிதிராவ்ஹைதாரியை அழகாகச் சில காட்சிகளில் காட்டிவிட்டு அதன்பின் அழுக்காக்கி மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள். அவரும் அழுது வீங்கிய கண்களோடு பரிதாபமாகக் காட்சியளிக்கிறார்.
உடல் செயலிழந்துவிட மூளை மட்டும் பலமாக இருக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் நித்யாமேனன், பேச்சிலேயே நடித்திருக்கிறார்.
அங்குலி மாலி என்கிற பெயரில் மனப்பிறழ்வு நோயாளியாக நடித்திருக்கும் ராஜ்குமார், சரியாக இருக்கிறார்.அவர் நடிப்புக்கு வரவேற்பு இருக்கிறது.
அதிகமாகப் பேசியே நடித்து பழக்கப்பட்ட சிங்கம்புலி, ரேணுகா ஆகியோர் அதிகமாகப் பேசாமல் நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.
காவல்துறை அதிகாரிகளாக வருகிற இயக்குநர் ராம் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் ஒரேமாதிரி நடித்து எரிச்சலூட்டுகிறார்கள்.
இளையராஜா இசையில் கபிலன் எழுதியிருக்கும் உன்ன நெனச்சு பாடல் சுகம்.நீங்க முடியுமா? என்கிற இன்னொரு அழகான பாடலை பதட்டமான காட்சியில் வைத்து காலி செய்துவிட்டார்கள்.
தன்வீர்மீர் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். திரைக்கதையின் உணர்வுக்கேற்ப காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
உருள்பெருந்தேர்க்கு அச்சாணி மிகச்சிறிது என்றார் திருவள்ளுவர். மிகச் சிறிய அளவிலான அன்பும் காட்டப்படாதவரே கொடூரமான குற்றவாளியாகிறான் என்று சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
அங்குலி மாலி என்றொரு பெயரும் பாத்திரமும் இலக்கியங்களில் காணப்படுகிறது. அங்குலி என்றால் விரல், விரல்களை மாலையாக அணிந்தவன் அங்குலிமால். இப்படியொரு பெயரை வில்லன் கதாபாத்திரத்துக்குச் சூட்ட வேண்டும், அதற்காகவே விரல் வெட்டும் காட்சிகள் வைக்க வேண்டும் என்கிற அளவு யோசித்த மிஷ்கின், திரைக்கதையில் மிகப்பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறார்.
தொடக்கத்தில் உயிரற்ற இளம்பெண்ணின் தலையில்லா உடலைப் பார்த்த தாய் கொஞ்சதூரம் நடந்து சென்று மண்டியிட்டு ஏ கடவுளே… என்று கதறுவதைப் பருந்துப்பார்வையில் காட்டி கலங்க வைக்கத் தெரிந்த மிஷ்கின், தலை வெட்டுவதைக் காட்சிப்படுத்துவதில் எதை உணர்த்த நினைக்கிறார்?
இறந்த உடல்களை உள்ளாடை விளம்பர தூதர் போலக் காட்சிப் படுத்தியிருப்பது என்ன உளவியல்?
அடுக்கடுக்கான கேள்விகள் எழும் அபத்தமான திரைக்கதையை அமைத்து தான் சொல்ல நினைத்ததை ரசிகர்களுக்குக் கடத்துவதில் படுதோல்வி அடைந்திருக்கிறார் மிஷ்கின்.
மிஷ்கினை நம்பி இந்தப்படத்தில் நடித்த உதயநிதிதான் ரொம்பப் பாவம்.அவரை நம்பிப் படம் பார்க்க வருகிறவர்கள் அதைவிடப் பாவம்.











