அரண்மனை 4 – திரைப்பட விமர்சனம்
அரண்மனை, பேய், நகைச்சுவை ஆகிய அம்சங்களை மையமாகக் படங்களின் வரிசையில் சின்னச் சின்ன மாற்றங்களுடனும் புதிய தீயசக்தியின் அறிமுகத்துடனும் வந்திருக்கிறது அரண்மனை 4.
பழைய அரண்மனையொன்றை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் சந்தோஷ் பிரதாப்.அவருடைய மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டுமின்றி ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அந்த அரண்மனையில் வசிக்கிறார்கள்.
திடீரென ஒரு நாள் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார்.அதன்பின் அவர் ரூபத்தில் வரும் தீய சக்தி அவரது குழந்தைகளைக் கொலை செய்ய முயல்கிறது.குழந்தைகளைக் காப்பாற்றப் போராடும் தமன்னாவும் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்.அவரது கொலையை தற்கொலை எனப்பதிகிறது காவல்துறை.
செய்தியறிந்து அந்த கிராமத்துக்கு வருகிறார் சுந்தர்.சி.இந்தப்படத்தில் அவர் தமன்னாவின் அண்ணன்.அவர் வந்து அதுவரை திரைக்கதையில் போடப்பட்ட புதிர்களை விடுவிக்கிறார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருக்கிறார் தமன்னா. அதற்காக அழகை வெளிப்படுத்தி இரசிகர்களைக் கவர்வதில் படக்குழுவினர் குறைவைக்கவில்லை.அழகு மட்டுமின்றி ஆவேசம்,பாசம் ஆகியனவற்றை நடிப்பில் வெளிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கிறார்.
இன்னொரு நாயகி ராஷிகண்ணாவுக்கு வாய்ப்பு குறைவு.தமன்னாவுடன் ஆடும் இறுதிப்பாடல் காட்சி நிறைவு.
சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிக்குமார்,யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், மறைந்த சேசு ஆகிய நிறைய நடிகர்,நடிகையர் படத்திலிருந்து படம் கலகலப்பாக நகரத் துணையிருக்கிறார்கள்.
கூடுதல் இனாமாக சிம்ரன்,குஷ்பு ஆகியோரின் நடனமும் பாடலும் அமைந்திருக்கிறது.
இ.கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு, கண்களுக்குக் குளுமை நெஞ்சத்துக்குப் பயம்.
ஹிப்ஹாப் தமிழா, சுந்தர்.சியின் எண்ணத்துக்கு இசைந்து இசையமைத்திருக்கிறார்.தாளம் போட வைக்கும் பாடல்கள்,பயத்தைத் தூண்டும் பின்னணி இசை ஆகியன பொருத்தமாக அமைந்திருக்கின்றன.
வழக்கமான அம்சங்களுடன் இந்தப்படத்தில் பாக் எனும் தீயசக்தியை அறிமுகப்படுத்தி அதற்கெதிரான போராட்டத்தை நடத்தியிருக்கிறார் சுந்தர்.சி.
உண்மைத்தன்மை நம்பகத்தன்மை ஆகியனவற்றைக் காட்டிலும் இந்தப் படத்துக்குப் போனால் சிரித்து இரசித்துப் பொழுதைப் போக்கிவிட்டு வரலாம் என்கிற நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறார் சுந்தர்.சி.
– இளையவன்