Uncategorized விமர்சனம்

தண்டட்டி – திரைப்பட விமர்சனம்

அச்சு அசலான கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தண்டட்டி.

தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலன்.தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர். இந்தக் காதணி அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டியிருக்கும். இதனைக் காது வடித்தல் என்று கூறுவர். இதற்காக அந்தக் காலப் பெண்கள் காது வளர்த்தனர். இவ்வாறு காது வடிக்கும் பழக்கம் தற்போது இல்லை.

இதை அடுத்தடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தப்படம்.

படம் எப்படியிருக்கிறது?

நான்கு மகள்கள், ஒரு மகன் ஆகியோரின் அம்மாவான ரோகிணிக்கு, தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு எனும் நிலை. அதனால் தொடக்கத்தில் காணாமல் போகிறார். பிறகு மாண்டுபோகிறார்.

உடனே அவர் காதில் இருக்கும் தண்டட்டிக்காக மொத்தக்குடும்பமும் போட்டி போடுகிறது. அப்போது என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் என்னவாகிறது? என்பதுதான் படம்.

தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி கிராமத்தை அப்படியே நகலெடுத்து திரையில் உலவவிட்டிருக்கிறார்கள். உண்மையான கிராம மக்களுக்கு ஈடுகொடுத்து ரோகிணி, அவருடைய மகள்கள் தீபாசங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம், மகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் தொடக்கத்திலிருந்து காவலர் வேடத்தில் வரும் பசுபதி, படம் கலகலப்பாக நகர பெரிதும் உதவுகிறார். இப்படி ஒரு காவலர் பாத்திரம் காவல்துறையினருக்கே சிரிப்பைக் கொடுக்கும். அந்தளவு அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் பசுபதி. இறுதித் திருப்பம் நெகிழ்வு.

மகேஷ்முத்துசாமியின் ஒளிப்பதிவில், கிராமத்தில் நிகழ்ந்த ஒரு துக்க வீட்டுக்குப் போய் நாமும் துக்கம் கேட்டுவிட்டு வந்த உணர்வு.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பாடல்களில் மண்மணக்கிறது. பின்னணி இசை நன்றாக அமைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ராம் சங்கையா, ஒரு கிராம வாழ்வை அதன் ஏற்றத்தாழ்வுகளுடன் பதிவு செய்திருக்கிறார். மறைந்து கொண்டிருக்கும் ஒரு அணிகலனின் பெயர், கிராமத்தில் நடக்கும் இறப்பு நிகழ்வின் சடங்குகள் ஆகியனவற்றை முன்னிறுத்தி ஓர் ஆழமான காதல்கதையைச் சொல்லி வரவேற்புப் பெறுகிறார்.

– குமார்.

Related Posts