துணிவு – திரைப்பட விமர்சனம்
ஒரு தனியார் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டு ஒரு கூட்டம் அந்த வங்கி உள்ளே நுழைகிறது. துப்பாக்கிகளைச் சுட்டுக் கொண்டே உள்ளே போய் மக்களை மிரட்டிப் பணிய வைக்கிற நேரத்தில் அங்கே உள்ள ஒருவர், கொள்ளையர்களை மடக்குகிறார். அவர்தான் அஜீத். கொள்ளையர்களை அவர் மடக்கிப் பிடித்துத் துப்பாக்கி முனையில் வைக்கிற நேரத்தில் எலோரும் கைதட்டி அவரைப் பாராட்டுகிறார்க்ள். அப்போது, நானும் இந்த வங்கியைக் கொள்ளையடிக்கத்தான் வந்தேன் என்கிறார்.
எதற்காக அந்த வங்கிக்கொள்ளை? அதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் துப்பாக்கிக் குண்டு மழைக்கு மத்தியில் சொல்லியிருக்கும் படம்தான் துணிவு.
நரைத்த தாடி மீசையுடன் அறிமுகமாகும் காட்சியிலிருந்து இறுதிவரை இரசித்து ருசித்து நடித்திருக்கிறார் அஜீத்.
உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்
என்கிற பாரதியாரின் வரிகளுக்கேற்ப செய்யும் செயல்குறித்த தெளிவுடன் இருக்கும் அஜீத் துணிவுடன் அரசாங்கங்களை எதிர்கொள்கிறார்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவோடு இருக்கும் தனியார் வங்கித்தலைவர், பரஸ்பர நிதி முதலீட்டு முதலை, போலிநிறுவன அதிபர் ஆகிய பெருமுதலைகளைச் சிறைபிடிக்கிறார். ஆடல், பாடல், அலட்சியப்பேச்சு என்று அஜீத் இருந்தாலும் அவர் பேசும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்கள் ஆழமானவை.
அவருக்கு உறுதுணையாக விளங்கும் மஞ்சுவாரியரும் துப்பாக்கிகளைக் கையாளுகிறார். சுட்டுத்தள்ளுகிறார்.
வங்கிக்கொள்ளைக்கு வரும் வீரா உள்ளிட்டோரும், வங்கியில் இருக்கும் ஜி.எம்.சுந்தர், பிரேம், வங்கித்தலைவர் ஜான்கொக்கேன், காவல்துறை ஆணையர் சமுத்திரக்கனி, ஆய்வாளர் பக்ஸ், காவலர் மகாநதி சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் கதைக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றனர்.
ஒரே கட்டிடத்துக்குள் பெரும்பகுதிப் படப்பிடிப்பு இருந்தாலும் காட்சிகளில் போரடித்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையைச் செய்திருக்கிறார் நீரவ்ஷா. அவருடைய பொறுப்பையும் மீறி அங்கங்கே வறட்சி இருக்கிறது.
ஜிப்ரானின் இசையில் அஜீத்துக்குப் பிடித்த தன்னம்பிக்கைப் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பின்னணி இசையில் விதவிதமான துப்பாக்கிக் குண்டுகளின் ஒலிக்காக அவர் மெனக்கெட்டிருக்கவேண்டும். படம் விட்டு வெளியே வந்தும் காதுக்குள் துப்பாக்கிச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
அ.வினோத் இயக்கத்தில், படம் நெடுக நம்பவியலாத காட்சிகள் நிறைந்திருப்பினும், எல்லோரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் வங்கி மூலமே பணப்பரிவர்த்தனை செய்யுங்கள்,கையில் பணமிருந்தால் அதை வீட்டில் வைக்காதீர்கள் வங்கியில் போட்டு வையுங்கள் அல்லது நிதித்திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யுங்கள் என்று கூவிக்கூவி பரப்புரை செய்து வரும் ஒன்றிய அரசின் திட்டங்களால் அப்பாவி மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கமாகச் சொல்லியிருப்பது நிறைவு.
ஒன்றிய அமைச்சரின் உத்தரவின் பேரில் உள்ளே நுழையும் அதிரடிப்படையிடம் ரவிந்தர் இது தமிழ்நாடு, உன் வேலை இங்கே செல்லாது என சமுத்திரக்கனி சொல்லுமிடம் தற்போதைய அரசியல் சூட்டில் எண்ணெய் ஊற்றுமிடம்.
மினிமம் பேலன்ஸ் ஐயாயிரம் இருந்தது, எஸ் எம் எஸ் அலர்ட்டுக்காக நாற்பது பிடித்தோம்.அதனால் மினிமம் பேலன்ஸ் குறைந்தது அதனால் மாதம் ஐநூறு ஃபைன் என்று வங்கி மேலாளராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர் சொல்லும்போது வங்கிகள் ஏழை மக்களை எவ்வளவு வஞ்சிக்கிறது என்பது அம்பலமாகிறது.அந்தவகையில் துணிவு கவனம் பெறுகிறது.












