விமர்சனம்

வாரிசு – திரைப்பட விமர்சனம்

அம்பானி அதானி போன்ற ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமார். அவர் மனைவி ஜெயசுதா, மூத்தமகன் தெலுங்குநடிகர் ஸ்ரீகாந்த், அடுத்த மகன் ஷாம். மூன்றாவதுமகன் தான் விஜய். அப்பாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் வீட்டை விட்டுப் போய் தனியாக வசிக்கிறார்.

அம்பானி வீடாக இருந்தாலும் ஆயிரத்தெட்டு சிக்கல்கள். ஒரு கட்டத்தில் சரத்குமாருக்கு உயிர்போகும் நிலை.அந்நேரம் திரும்ப அந்த வீட்டுக்குள் வந்து, சரத்குமாரின் தொழில்வாரிசாகிறார் விஜய். அதற்குக் கடும் எதிர்ப்புகள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் என்னவாகிறது? என்பதுதான் படம்.

துள்ளுந்தில் ஊர்சுற்றுகிறார். பல இயற்கை அழகுகளைப் புகைப்படமாக்குகிறார். பல்வகை மனிதர்கள் சந்திப்பு. புதிய தொழில் தொடக்கம் என உற்சாகமாக வலம்வரும் நேரத்திலும் அம்மா பாசத்தால் வீட்டுக்கு வந்து அப்பா பாசத்தால் அதிரடி முடிவெடுக்கும் நேரம் என எல்லா இடங்களிலும் விஜய் தனது முத்திரையைப் பதிக்கிறார். மிக இயல்பாக நடனம் ஆடக்கூடிய விஜய் இந்தப்படத்தில் கஷ்டப்பட்டு கவனமாக ஆடுகிறார்.யோகிபாபுவை மிஞ்சுகின்றன அவரது நகைச்சுவைகள்.

எனக்கும் எங்க அப்பாவுக்கும் பிரச்சினைன்னா அதில் உனக்கென்ன? என்று பத்திரிகையாளரிடம் சீறும்போது நிஜ விஜய் தெரிகிறார்.

நாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு, ஜிமிக்கி பொண்ணு மற்றும் ரஞ்சிதமே ஆகிய பாடல்களில் இளைஞர்களைக் கிறங்கடிக்கும் வேலை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைச் சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார். ஜிமிக்கி பொண்ணு பாடலில் அவருக்கு உடை வடிவமைத்தவருக்குப் பாதி சம்பளம் கொடுத்தால் போதும்.

சரத்குமார் கம்பீரமான தொழிலதிபராகத் தோன்றுகிறார். மகன் விஜய் முன் உடைந்து நிற்கும் காட்சி அவருடைய நடிப்புத்திறனுக்குச் சான்று.

ஜெயசுதா, தெலுங்குநடிகர் ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோருக்கு முக்கியமான வேடங்கள். அவற்றைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

வில்லனாக பிரகாஷ்ராஜ்.வழக்கம்போல நடித்திருக்கிறார்.யோகிபாபு கொஞ்சநேரம் வருகிறார்.ஓரிரு காட்சியில் வந்து எஸ்.ஜே.சூர்யா வரவேற்புப் பெறுகிறார்.

கார்த்திக்பழனியின் ஒளிப்பதிவு படத்தைப் பெரிதாக்குகிறது.ஒவ்வொரு காட்சியிலும் செல்வச்செழிப்பு நிரம்பிவழிகிறது.

தமனின் இசையில் ரஞ்சிதமே பாடல் ஆட்டம்போட வைக்கிறது.பின்னணி இசை தாழ்வில்லை.

பிரவீன் கே.எல் படத்தொகுப்பு. இன்னும் கொஞ்சம் நீளம் குறைத்திருக்கலாம்.

தெலுங்கு இயக்குநர் வம்சிபடிபள்ளி முழுக்க விஜய்யை நம்பியிருக்கிறார். அதனால் கதை திரைக்கதை ஆகியனவற்றில் கவனம் செலுத்தவில்லை. சிறுவர்களும் யூகிக்கக்கூடிய கதையை அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய திரைக்கதையை அச்சுப் பிசகாமல் சொல்லி சலிப்பூட்டுகிறார்.

விஜய்க்காகப் பார்க்கலாம்.

Related Posts