அன்பே டயானா – திரைப்பட விமர்சனம்
திரைப்படம் என்பது கதை சொல்லும் ஊடகமன்று உணர்வுகளைக் காட்சிகளாக்கி உலுக்கக்கூடிய ஊடகம் என்பது பலருக்குத் தெரிவதேயில்லை.ஜமா படம் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இதை உணர்ந்து உருவாக்கியிருக்கும் படம் அன்பே டயானா.
சென்னை பெரம்பூரில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகனுக்கு அதேபகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதன் மீது காதல்.(ஆடுகளம் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல).நாயகனின் காதலை நிராகரிக்கும் நாயகி ஒருகட்டத்தில் நாயகன் காதலை ஏற்கிறார்.அப்போது அந்தக் காதலை நாயகன் நிராகரிக்கிறார்? ஏன்? என்கிற கேள்விக்கு விடைதாம் படம்.
ஜமாவில் தெருக்கூத்துக்கலைஞராக நடித்தது இவரா? என்று வியக்கும்படி முற்றிலும் தோற்ற மாற்றம் செய்து நடித்திருக்கிறார் நாயகன் பாரி இளவழகன்.காதலுக்காக ஏங்குவது,அதே காதல் கைகூடியதும் அதை ஏற்கவியலாமல் தயங்குவது உட்பட எல்லாக் காட்சிகளிலும் மிகப்பொருத்தமாக நடித்து வரவேற்பைப் பெறுகிறார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? படத்தில் சிறிய வேடத்தில் நடித்து பெரும் கவனம் ஈர்த்த ரம்யா ரங்கநாதன்,இப்படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்திருக்கிறார்.அழகால் ஈர்க்கும் அவர் நடிப்பிலும் சிறப்பு அதோடு பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார்.ஆங்கிலம் கலந்த சென்னைத் தமிழை அவர் உச்சரித்திருக்கும் விதம் நன்று.
நாயகன் நாயகிக்கு இணையாக வலம்வருகிறார் ரோஜா.நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அவர் தமிழும் தெலுங்கும் கலந்த உரையாடல்களில் மட்டுமின்றி உடல்மொழியிலும் சூட்டிப்பு காட்டி வியக்க வைத்திருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தனின் வேடமும் அதற்கேற்ற அவர் நடிப்பும் அருமை.
வலையொளி புகழ் பரிதாபங்கள் கோபி,பெங்களூர் தமிழர் வேடத்தில் நடித்து படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்.சில காட்சிகளில் வரும் செல்முருகனும் சிரிக்க வைக்கிறார்.
நாயகனின் மாமா பெண் நிகிலா சங்கர்,நாயகனின் சகோதரி இஸ்மத் பானு,சகோதரனாக நடித்திருக்கும் பத்திரிகையாளர் சுதர்சன் காந்தி ஆகிய அனைவரும் படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் திரைக்கதை பலம்பெற வேண்டுமெனில் காட்சிகளும் கைகொடுத்தாக வேண்டும் என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட்.சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் மக்களே படத்தில் வரும் பெரம்பூரைப் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
பரத்சங்கரின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கும் வகை.பின்னணி இசையிலும் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருகிறார்.
படத்தொகுப்பாளர் பார்த்தா.எம்.ஏ,படத்தை வேகமாக்க முயன்று வென்றிருக்கிறார்.
கதை எழுதி இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாரி இளவழகன்,ஒற்றைவரிக்கதையை வைத்துக் கொண்டு நடுத்தட்டு வாழ்க்கையின் பல்வேறு பரிணாமங்களை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்.
– இளையவன்











