விமர்சனம்

சாமி இருமடங்கு – திரைப்பட விமர்சனம்

2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தில், திருநெல்வேலியில் காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஆறுச்சாமி, அந்த மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்குடன் இருக்கும் பெருமாள்பிச்சையுடன் மோதி, கடைசியில் யாரும் அறியாவண்ணம் அவரைக் கொலைசெய்வார். பெருமாள்பிச்சையைக் காணவில்லை என்பது மக்கள் கருத்து. அதோடு படம் முடியும்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது வந்திருக்கும் சாமி இருமடங்கு படத்தில், முதல்பாகத்தில் காணாப் பிணமான பெருமாள்பிச்சையின் மகன்கள் ஓஏகே தேவர், ஜான்விஜய், பாபிசிம்ஹா ஆகிய மூவரும் தந்தையைத் தேடி கொழும்பிலிருந்து திருநெல்வேலி வருகிறார்கள்.

வந்த இடத்தில் பெருமாள்பிச்சையை ஆறுச்சாமிதான் கொன்றார் என்கிற விசயத்தைத் தெரிந்து ஆறுச்சாமியையும் அவருடைய மனைவியையும் கொலைசெய்கிறார்கள். குழந்தை மட்டும் தப்புகிறது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுச்சாமியின் மகன் ராம்சாமி அதே திருநெல்வேலிக்கு காவல்துறை அதிகாரியாக வருகிறார்.

ஒரு அண்ணன் அமைச்சர், இன்னொரு அண்ணன் பெரும் தொழிலதிபர் என்கிற நிலையில் திருநெல்வேலியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாபிசிம்ஹாவை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம்.

15 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே துடிப்புடன் இருக்கிறார் விக்ரம், காவல்துறை அதிகாரியாக ஏறி அடித்திருக்கிறார். அப்போது பீர் இப்போது மோர் என்பது நல்ல மாற்றம்.

விக்ரமை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் மத்திய அமைச்சர் பிரபுவின் மகளான கீர்த்திசுரேஷ். தாஜ்மகாலில் காதல் சொல்வது, ஹெலிகாப்டரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்வது என்று கீர்த்திசுரேசின் காதல் பிரமாண்டமாக இருக்கிறது.

த்ரிஷாவுக்குப் பதிலாக வருகிற ஐஸ்வர்யாராஜேஷ் ஒட்டவில்லை.

சூரி இந்தப்படத்தில் கடும் எரிச்சல் மூட்டுகிறார். ஒரு இடத்தில் கூட சிரிப்பு வரவில்லை.

பாபிசிம்ஹா வில்லன் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். திமிருடனே இருக்கும் அவர் கடைசியில் கண்களில் மரணபயத்தை வெளிப்படுத்தி எனக்கு நடிக்கவரும் என்று காட்டியிருக்கிறார்.

வெங்கடேஷ் அங்குராஜின் ஒளிப்பதிவு இயக்குநர் ஹரியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்களில் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார்கள். கேட்கும்படி இருக்கின்றன.பின்னணி இசையிலும் வித்தியாசம் காட்டினால் நன்றாக இருக்கும். தாங்க முடியவில்லை.

சாமி முதல்பாகத்தில் செங்கற்சூளையில் வில்லனைக் கொன்ற இயக்குநர் ஹரி இந்தப்படத்தில் வில்லனுக்கு வித்தியாசமான தண்டனை கொடுக்கிறார்.

குடியரசுத்தலைவர் ஒரு மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி மாற்றத்தில் தலையிடுகிறார், மத்தியில் ஆளும்கட்சியை ஒரு அடியாள் மிரட்டுகிறார் உள்ளிட்ட பல அபத்தங்களைக் கணக்கில் கொள்ளாமல் பார்த்தால் சண்டைப்படப் பிரியர்களுக்கான படம்.

Related Posts