September 15, 2026
விமர்சனம்

கிஸ் – திரைப்பட விமர்சனம்

காதலே பிடிக்காத நாயகனுக்குக் காதல் வந்தால் என்ன ஆகும்? என்கிற கதையை வைத்து நிறையப் படங்கள் வந்துவிட்டன.இந்தப்படத்திலும் நாயகன் அப்படித்தான் என்பதோடு கூடுதலாக அவருக்கு ஒரு அளப்பரிய ஆற்றல் இருக்கிறதென்றும் அதனால் பல நிகழ்வுகள் நடக்கிறதென்றும் சேர்த்துக் கொடுத்து சுவை கூட்ட முயன்றிருக்கும் படம் கிஸ்.

நாயகன் கவின் முன்னால் இணையர் எவராவது முத்தமிட்டுக் கொண்டால்,அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும்? என்பதை அறிந்து கொள்ளும் சக்தி இருக்கிறது என்று கதை போவதால் இந்தப் பெயர். காதல் பிடிக்காத நாயகனுக்கு நாயகி ப்ரீத்தி அஸ்ராணி மீது காதல் வருகிறது.அவருக்கும் இவர் மீது காதல்.அதை வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையில் திடீரென ஒருநாள் நாயகனுக்கு முத்தம் கொடுத்துவிடுகிறார் நாயகி. அதனால் அவர்கள் எதிர்காலம் கவினுக்குத் தெரிகிறது.அதனால் நாயகியை விட்டு விலகுகிறார்.அது ஏன்? கடைசியில் என்னவாகிறது? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை சொல்கிறது படம்.

காதலை வெறுத்தல், காதலித்தல், காதலியை நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆகிய மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரத்தை ஏற்று எல்லாவற்றிலும் நிறைவாகச் செய்திருக்கிறார் கவின்.

நாயகி ப்ரீத்தி அஸ்ராணிக்கும் சும்மா வந்து போகிற வேடமில்லை.அழுத்தமான வேடம், சரியாகச் செய்திருக்கிறார்.அழகும் இளமையும் ததும்ப நடித்து இரசிகர்களை ஈர்க்கிறார்.

ஆர்ஜே.விஜய்,விடிவி கணேஷ் ஆகியோர் அங்கங்கே வாய்விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

ராவ் ரமேஷ்,தேவயானி,சிறப்புத் தோற்றத்தில் வரும் பிரபு,கெளசல்யா ஆகியோரும் நன்று.

ஹரீஷ் கண்ணணின் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் இளமைத் துள்ளல் காட்சிகளிலும் விரிந்திருக்கிறது.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக் களத்தோடு இசைந்திருக்கின்றன.

படத்தைத் தொகுத்திருக்கும் ஆர்.சி.பிரனாவுக்கு சவாலான படம்.அங்கங்கே தடுமாறினாலும் படத்தை சரியாக நிலைசேர்த்திருக்கிறார்.

நடன இயக்குநராகப் புகழ்பெற்றிருக்கும் சதீஷ் கிருஷ்ணன் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.மாறுபட்ட கதை, இளமை ததும்பும் திரைக்கதை ஆகியனவற்றோடு களமிறங்கியிருக்கிறார்.அவருக்கு கவினும் ப்ரீத்தி அஸ்ரானியும் நன்றாகக் கை கொடுத்திருக்கிறார்கள்.படத்திற்கு வேறு தலைப்பு வைத்திருந்தால் பலம் கூடியிருக்கும்.

– இளையவன்

Related Posts