ட்ரிப் – திரைப்பட விமர்சனம்
ஒரு காடு அதற்குள் சுற்றுலா செல்லும் நண்பர்கள் கூட்டம். அங்கு அவர்களுக்குப் பல ஆபத்துகள் மற்றும் மர்ம மரணங்கள்.அவை ஏன்? எதற்கு? எப்படி?
இவற்றிற்கு விடை சொல்லும் படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வந்திருக்கும் படம் தான் ட்ரிப்.
முழுதும் திகில் மர்மம் என்று போகும் படங்களுக்கு மத்தியில் நகைச்சுவை கலந்து அணுகியிருப்பதுதான் இப்படத்தின் மாறுபாடு.
நகைச்சுவைக்காகவே யோகிபாபுவுக்கும் கருணாகரனுக்கும் படம் நெடுக வரும் முக்கிய பாத்திரங்கள்.
அவர்களும் ஏமாற்றாமல் சிரிக்க வைக்கிறார்கள். முக்கியமான நேரங்களில் யோகிபாபுவும் கருணாகரனும் அடிக்கும் கமெண்ட்டுகள் ரசிக்க வைக்கின்றன.
சுனைனா, பிரவீன்குமார், லட்சுமி பிரியா, நான்சி ஜெனிபர், கல்லூரி வினோத், விஜே சித்து, ராகேஷ் ஆகியோர் நண்பர்கள் கூட்டத்துக்குப் பொருத்தம்.
சுனைனாவின் மேல் சட்டையைக் கழற்றிவிட்டு பனியனோடு உலவவிட்டு இளைஞர்களைப் பரவசப்படுத்த முயன்றிருக்கிறார்கள். அவரும் ஓடுகிறார் ,குதிக்கிறார், அடிக்கிறார், பயப்படுகிறார்.
மொத்தப்படப்பிடிப்பும் காட்டுக்குள்ளேயே என்றாலும் காட்சிகளில் சலிப்பு ஏற்படாமல் இருக்க உதயஷங்கரின் ஒளிப்பதிவு உதவியிருக்கிறது.
சித்துகுமாரின் இசையில் இரண்டு பாடல்கள். அவற்றில் ஒன்றைக் கட்டக்கடைசியில் போட்டுவிட்டார்கள். பின்னணி இசையும் அளவாக இருக்கிறது.
இந்துமாக்கடலில் எங்கோ உள்ள ஒரு தீவில் இருக்கும் ஆபத்து கொடைக்கானல் காட்டுக்குள் வந்தது எப்படி? என்பதை புதிதாய்ச்சொல்ல மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.
நிறைய கேள்விகள் எழுப்பும் திரைக்கதை, ஒரு காட்சியில் கொடும் மரணம் அடுத்த காட்சியில் காதல் அப்புறம் நகைச்சுவை என்று போவதால் எதிலும் முழுமை இல்லாமை ஆகியன படத்துக்குப் பின்னடைவு.
யோகிபாபு கருணாகரன் நகைச்சுவை சுனைனாவின் வனப்பு ஆகியன படத்தைக் காக்கின்றன.












