November 27, 2026
விமர்சனம்

நிறம் – திரைப்பட விமர்சனம்

நாயகன் முகேன் ராவ்,நாயகி பிரீத்தி அஸ்ராணி ஆகிய இருவரும் காதலிக்கின்றனர்.இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகின்றனர்.அன்றைய தினமே ப்ரீத்தி அஸ்ராணி காணாமல் போகிறார்.
கட்டுமானப் பணி நடைபெறும் அடுக்குமாடி கட்டிடத் தூண் ஒன்றில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனை உரிமையாளரான சுரேகா வாணியின் மகள் தன்யா ஹோப் கடத்தப்படுகிறார்.

இம்மூன்று நிகழ்வுகளும் தனித்தனியாக நடந்தாலும் ஒருபுள்ளியில் அவை இணைகின்றன.அது என்ன? என்பதை விவரிக்கும் படம் நிறம்.

நாயகன் முகேன் ராவ்,மருத்துவக் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார்.காதல் மோதல் பதட்டம் துணிவு ஆகிய எல்லா வகைகளையும் வெளிப்படுத்தக்கூடிய வேடம்.அவற்றைத் தம் நடிப்பில் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி,தைரியமான பெண்ணாகவும் காதல் காட்சிகளில் துறுதுறுவென நடித்து இரசிக்க வைத்திருக்கிறார்.ஆழமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார்.

இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார் தன்யா ஹோப்.படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம்.அதனை உணர்ந்து அதற்கேற்ற முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்குப் பலமாக இருக்கிறார்.

மருத்துவமனை உரிமையாளர் சுரேகா வாணி,அரசியல் தலைவர் கஜராஜ்,அன்பு மயில்சாமி,திருநாவுக்கரசு ஆகியோர் நடிப்புகளும் இயல்பாக அமைந்திருக்கின்றன.

மருத்துவமனை நிர்வாகியாக,எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கிறார் நிதின் சத்யா.அடிக்கடி பாவனைகளை மாற்ற வேண்டிய சவாலான வேடம் அமைந்திருக்கிறது.அதைச் சரியாகச் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சான்டோனியோ டெர்சியோ,காதல் காட்சிகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.சண்டைக்காட்சிகள் வேகமாக இருக்கின்றன.

டி.இமான் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.காட்சிகளில் உள்ள விறுவிறுப்பை பின்னணி இசை மூலம் மேலும் வேகப்படுத்திக் காட்டுகிறார்.

பல கதைகள் தனித்தனியாகப் பயணித்து ஓரிடத்தில் இணையும் வகை திரைக்கதைக்குப் படத்தொகுப்பு மிக முக்கியம்.அதை உணர்ந்து பணியாற்றி படத்தை இரசிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சாபுஜோசப்.

எழுதி இயக்கியிருக்கும் பலராம் கிருஷ்ணா,யூகித்துவிடக்கூடிய வாய்ப்புள்ள விசயங்களை வைத்துக்கொண்டு எதிர்பாரா காட்சியமைப்புகளைச் சேர்த்து தொடக்கம் முதல் இறுதிவரை வேகமாகப் பயணிக்கும் படத்தைக் கொடுத்திருக்கிறார்.மருத்துவத் துறையில் நடக்கும் சில நிகழ்வுகளை வைத்து சமுதாயப் பொறுப்புணர்வுடனான கருத்தை திரைக்கதையில் இணைத்து தரமான படத்தைக் கொடுத்திருக்கிறார்.

– இளையவன்

Related Posts