டெலிவரி பாய் – திரைப்பட விமர்சனம்
தாயின் மருத்துவச்செலவுக்காக திருப்பிக் கொடுக்கும் எண்ணத்துடன் பணம் திருடுகிறார் நாயகன்.அந்தப்பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போகும் நேரத்தில் ஓர் எதிர்பாரா நிகழ்வு.அந்நிகழ்வைக் கண்டும் காணாமல் போகாமல் அதில் பாதிக்கப்படுபவருக்கு உதவப்போகிறார்.அதனால் பெரும் சிக்கல்.அது என்ன? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் டெலிவரி பாய்.
காவல்துறை வேலையில் சேரக் காத்திருக்கும் நாயகன் தற்காலிகமாக உணவுவிநியோகராக வேலை செய்கிறார்.அதனால் படத்துக்கு டெலிவரி பாய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார்,முந்தைய படங்களைக் காட்டிலும் முதிர்ந்திருக்கிறார்.இந்தப்படத்தில் ஏற்றிருக்கும் வேடத்தில் பொருத்தமாக நடித்து முழுமையான நாயகனாகியிருக்கிறார்.
நாயகியாக பிரிகிடா சாகா நடித்திருக்கிறார்.அவருக்கு முக்கியத்துவம் குறைவு என்றாலும் முதல் பாதி முழுக்க அவர் நிறைந்திருக்கிறார்.
முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் துஷ்யந்த்,காளி வெங்கட்,ஜென்சன் திவாகர்,போஸ் வெங்கட்,உதயா தீப் ஆகியோர் ஆகியோர் படத்துக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.
நாயகனின் தாயாக நடித்திருக்கும் ராதிகா,வழக்கம்போல் மிகப் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ்.குமார் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.சண்டை மற்றும் துரத்தல் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.திரைக்கதைக்கேற்ற உணர்வுகளை காட்சிகளிலும் உணர வைத்திருக்கிறார்கள்.
சுந்தரமூர்த்தி.கே.எஸ் இசையில் பாடல்கள் துள்ளலும் துடிப்புமாக இருக்கின்றன.பின்னணி இசையில் படத்தின் திரைக்கதைக்கு உரம் சேர்த்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஆர்.வசந்தகுமார்,படம் வேகமாக ஓடவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உழைத்து இரசிகர்களைக் காத்திருக்கிறார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபுவின் பங்களிப்பு படத்துக்கும் நாயகனுக்கும் பலம்.
எழுதி இயக்கியிருக்கிறார் நானி.திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க எண்ணும் நாயகன் லியோசிவக்குமார்,தெரிந்தே திருட்டுக் கொடுக்கும் துஷ்யந்த் என கதாபாத்திரங்களை உருவாக்கும்போதே மாற்றிச் சிந்தித்திருக்கிறார்.
ஒரு உணவு விநியோகம் செய்யும் ஓர் இளைஞர் இப்படியெல்லாம் செய்யமுடியுமா? என்கிற கேள்வி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர் காவல்துறை வேலையில் சேரக்காத்திருப்பவர் என நாயகனை அறிமுகப்படுத்திவிடுகிறார்.அதனால் படம் நெடுக நாயகன் லியோசிவக்குமார் செய்யும் சாகசங்கள் இயல்பாக இருக்கிற உணர்வைத் தந்துவிடுகிறது.
எதிர்மறைக்கூட்டம் பழையது போல் இருந்தாலும் அதில் நடிக்கத் தேர்ந்தெடுத்த புதியவர்களும் அவர்களுக்கான பாத்திர வடிவமைப்பும் புதியதாக இருக்கின்றன.
– இளையவன்











