November 21, 2026
சினிமா செய்திகள்

மக்கள் காவலன் படத்துக்குச் சிக்கல் – விவரம்

குட் நைட்,லவ்வர்,குடும்பஸ்தன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து கே.மணிகண்டன் ‘மக்கள் காவலன்’ படத்தின் மூலம் முதன்முறையாக ஒரு அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.கே.மணிகண்டன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க,அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ்,ஆர்.கே.விஜய் முருகன்,சண்முகம் முத்துசாமி,சபுமோன்,உன்னி மாயா,திவ்யா ஸ்ரீபாதா,ஜென்சன் திவாகர்,லல்லு,ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ படத்திற்கு பிறகு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை அருள் மோசஸ் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை பாப்பநாடு சி. உதயகுமார் கவனித்திருக்கிறார். சண்டைப்பயிற்சியை டான் அசோக் – ஒலி வடிவமைப்பினை ஆண்டனி ஜெயரூபன் – ஆடை வடிவமைப்பை சுரேஷ்குமார்- ஒப்பனையை ராமச்சந்திரன் – ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியிருக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் கதையை உரக்கப் பேசுகிறது.ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவரை சரணடைவது அல்லது எதிர்த்து போராடுவது என்ற இரண்டு தேர்வுகளுக்குள் உந்தித் தள்ளுகிறது. ஒரு தனிமனிதனின் உயிர் வாழ்வதற்கான போராட்டமாக தொடங்கும் இது… மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது.இதனால் அவர் ஒருபோதும் விரும்பாத… ஒரு தலைவராக மாறவேண்டிய கட்டாய சூழல் உருவாகிறது.

போராட்டம் தீவிரம் அடையும் போது,அதற்கான விலையும் அதிகரிக்கிறது.அதேசமயத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கும்,மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மறைய தொடங்குகிறது.தனது பிறப்பு சூழலோ… அல்லது தன்னை சுற்றியுள்ள தடைகளோ… தனது லட்சியத்தின் எல்லையை தீர்மானிக்க அனுமதிக்காத ஒரு மனிதனின் கதையே இப்படத்தின் மையப் பொருளாகும்.

உலகம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால் கனவு காணும் துணிச்சலையும்… அந்த எல்லைகள் முக்கியத்துவமற்றதாக மாறும் வரை தொடர்ந்து முன்னேறும் மன உறுதியையும்,இத்திரைப்படம் அழுத்தமாகப் பேசுகிறது.

மணிகண்டனின் பிறந்தநாளான செப்டம்பர் 29்அன்று ‘மக்கள் காவலன்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதில்,டிசம்பர் 4 ஆம் தேதி ‘மக்கள் காவலன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று சொல்லியிருந்தார்கள்.

இப்போது அதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம்.

என்ன சிக்கல்?

படம் பார்த்த தணிக்கைக்குழுவினர்,படத்தின் பேசப்படும் வசனங்கள்,சொல்லப்படும் கருத்துகள் ஆகியன அரசாங்கத்துக்கு தீவிர எதிர்நிலையில் உள்ளது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டார்களாம்.அதோடு, மறுதணிக்கைக்குழுவுக்குச் செல்லும்படி சொல்லிவிட்டார்களாம்.

இதனால்,சொன்ன தேதியில் இந்தப்படம் வெளியாகாது என்கிறார்கள்.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனராம்.

Related Posts