அஞ்சாமை – திரைப்பட விமர்சனம்

சமுதாயத்தைப் பிரதியெடுத்தல் அல்லது பிரதிபலித்தல் தாம் கலைகள் என்பார்கள்.மருத்துவக் கனவோடு இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தையும் அவர்தம் பெற்றோரையும் பிரதிபலித்திருக்கும் கலைப்படைப்பு தான் அஞ்சாமை.
உலகிலேயே தலை சிறந்த மருத்துவர்களைக் கொண்ட இந்நாட்டில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித்தேர்வு அவசியம் என்கிற சட்டத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் இலட்சணங்களையும் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி காட்சிப்படுத்தியிருக்கும் படம் அஞ்சாமை.
தன் மகனின் மருத்துவர் கனவை நனவாக்கப் போராடும் தந்தையாக நடித்திருக்கிறார் நாயகன் விதார்த்.இயக்குநர் அந்தக் கதாபாத்திரத்தை என்ன நினைத்து எழுதினாரோ? அதை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார்.தொடர்வண்டிக் காட்சிகளிலும் தேர்வு மையக் காட்சிகளிலும் மட்டுமின்றி வீட்டில் இயல்பாக நடக்கும் காட்சிகளில் கூட அவருடைய திறமை பளிச்சிடுகிறது.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கே வாணிபோஜனுக்கு ஒரு தனி வணக்கம் வைக்கலாம்.அந்த வேடத்துக்கு உயிர் கொடுத்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
மாணவனாக நடித்திருக்கும் கிருத்திக் நல்ல தேர்வு.வேடத்தின் கனத்தை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
மக்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வழக்கறிஞரான ரகுமான், நீதியை எதிர்பார்த்து ஏங்குவோர் விரும்பும் நீதிபதியாக நடித்திருக்கும் பாலச்சந்திரன் ஆகியோர் படம் எளிதாக நகர பெரிதும் பயன்பட்டிருக்கிறார்கள்.
ராகவ்பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கலாம்.அறிவுமதி எழுதிய நீயே நீயே பாடல் கூடுதல் இதம்.கலா சரண், பின்னணி இசையில் பல காட்சிகளுக்கு நெருப்பு மூட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக்குக்குக் கடுமையான வேலைப்பளு உள்ள படம். தொடர்வண்டிக் காட்சிகள் அதற்குச் சான்று.
படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன்,விரும்பி வேலை செய்திருக்கிறார்.சில காட்சிகளை இரசித்து அப்படியே விட்டுவிட்டார்.
இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன்,நெஞ்சில் கனன்ற நெருப்புக்குக் காட்சி வடிவம் கொடுத்து பார்ப்போரையும் எரிய வைத்திருக்கிறார்.சுருக்கெனத் தைக்கும் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன. வெகுமக்கள் எண்ணங்களை அரசாங்கம் அரக்கக் கரங்களால் அழிப்பதை, மிகப்பெரும் போக்குவரத்து சாதனமான தொடர்வண்டிகளின் அவலநிலையை,குப்பைத் தொட்டிக்கு ஈடான தேர்வு மையங்களைக் காட்டி கனல் மூட்டுகிறார்.
நீட் தேர்வு தேவையில்லாத ஆணி என்பதை விரல்நீட்டும் வசனங்கள் இல்லாமல் காண்போரை உணரவைக்கிறார்.
நீட் தேர்வு வேண்டாம் என்கிற இந்தப்படத்தை மனநல மருத்துவர் திருநாவுக்கரசு தயாரித்திருக்கிறார் என்பது நீட்டை கொண்டு வந்தோருக்கும் நீட்டுக்கு முட்டுக் கொடுப்போருக்கும் சொல்லப்பட்டிருக்கும் அழுத்தமான செய்தி.
– அழகன்