பி.டி.சார் – திரைப்பட விமர்சனம்
தலைப்பில் இருக்கும் பி டி சார் என்கிற ஆங்கிலப் பெயரின் தமிழாக்கம் உடற்பயிற்சி ஆசிரியர். இந்தப் படத்தில் நாயகன் ஹிப்ஹாப் ஆதி ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.எனவே படத்துக்கு இந்தப் பெயர்.
அவர் பணியாற்றும் கல்விக் குழுமத்தில் இருக்கும் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொள்கிறார்.அவருடைய தற்கொலைக்கு என்ன காரணம்? என்பதை உணர்ந்து அது கொலை என்று வழக்குப் போகிறார் ஹிப்ஹாப் ஆதி.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.
எந்த வம்பு தும்புக்கும் போகாத பயந்த சுபாவமுள்ளவராக வருகிறார் ஹிப்ஹாப் ஆதி.அது அவருக்குக் கைவந்த கலை என்பதால் மிக இயல்பாக இருக்கிறார்.இப்படி வரும்போதே பின்னால் அப்படி ஆவார் என்று யூகிப்பது போலவே ஆகிறார். இரண்டு விதங்களிலும் நடிப்பில் வேறுபாடு காட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் காஷ்மிரா பர்தேசிக்கு அதிக வேலையில்லை.ஆனாலும் கொடுத்த வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார்.
அனிகாவுக்கு கதையில் முக்கியத்துவம் உண்டு. அதை உணர்ந்து நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
கல்லூரி உரிமையாளராக நடித்திருக்கும் தியாகராஜன் நன்று.பார்ப்போருக்குக் கோபம் கொப்பளிக்குமளவுக்கு நடித்திருப்பது அவரது சிறப்பு.
இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் அதிக கவனம் பெறும் வண்ணம் அவர்களுடைய பாத்திரப் படைப்பும் நடிப்பும் அமைந்துள்ளது.
பிரபு, கே.பாக்யராஜ், ஆர்.பாண்டியராஜன், முனிஷ்காந்த், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, ஒய்.ஜி.மதுவந்தி, சுட்டி அரவிந்த், ஆர்.ஜே.விக்கி, அபிநட்சத்திரா எனப் பெரிய பட்டாளமே படத்தில் இருந்து காட்சிகளை இலகுவாக நகர்த்த உதவுகிறது.
நாயகன் ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்திருக்கிறார்.அவருடைய பாணியில் அமைந்திருக்கிற பாடல்கள் கேட்கும் இரகம்.
பின்னணி இசையில் முன்னிலை பெறுகிறார்.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன.
கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்கியிருக்கிறார். ஓர் உடற்பயிற்சி ஆசிரியரை நாயகனாக்கி கதை எழுதினாலும் அக்கதை முழுதும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைப் பற்றிப் பேசியிருக்கிறது.பெண்கள் சம்பந்தமாக திடுக்கிட வைக்கும் வசனங்கள் மற்றும் காட்சிகள் வைத்து படத்தின் கனத்தைக் கூட்டியிருக்கிறார்.
திரைமொழியில் கருத்தைக் கருத்தாக மட்டும் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து எல்லாவித அம்சங்களையும் கலந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.அங்கங்கே சறுக்கினாலும் மையக்கருத்து பார்ப்போர் மனங்களில் ஆழப்பதிவது பலம்.
– இளையவன்











