September 16, 2026
விமர்சனம்

இந்த க்ரைம் தப்பில்ல – திரைப்பட விமர்சனம்

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் நியாயத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று ஓங்கிச் சொல்லும் படமாக வந்திருக்கிறது இந்த க்ரைம் தப்பில்ல.

முன்னாள் இராணுவ வீரர் ஆடுகளம் நரேன், நியாயத்துக்காகப் போராடும் ஒரு குழுவை வழிநடத்துகிறார்.
அந்தக்குழு வெறுமனே போராட்டம் மட்டும் நடத்தும் குழுவன்று.உறுதிப்படுத்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனையும் கொடுக்கும் குழு.

ஒன்றுக்கு மூன்று பேரை ஒருவருக்கொருவர் தெரியாமல் காதலிக்கும் நாயகி மேக்னாஎலன், அந்தக் குழுவிடம் உதவிகேட்டு வருகிறார்.

அவர் ஏன் ஒரேநேரத்தில் மூவரைக் காதலிக்கிறார்? அவர் நியாயக்குழுவிடம் கேட்கும் உதவி என்ன? இறுதியில் என்ன நடந்தது? ஆகியனவற்றைச் சொல்லியிருக்கிறது படம்.

ஆடுகளம் நரேன் தான் இந்தப்படத்தில் நாயகன். நாட்டின் நிலை கண்டு கலங்குவது,அதற்கு எதிராகப் பொங்குவது என்று எல்லாக்காட்சிகளிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

குழுத்தலைவராக நடித்திருக்கும் பாண்டிகமலின் தோற்றமும் நடிப்பும் பாத்திரத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

நாயகி மேக்னாஎலன், எளிய அழகு. பொருத்தமான நடிப்பு ஆகியனவற்றின் மூலம் கவர்கிறார்.

முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி, தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

நடிகர்களுக்கேற்ற சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார் கணேஷ். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவில் காட்சிகளில் நிறைகுறை கலந்திருக்கின்றன. பரிமளவாசன் இசையில் தாழ்வில்லை.

எழுதி இயக்கியிருக்கும் தேவகுமார், அநீதிக்கெதிரான போராட்டங்களை நடத்திக் கொண்டே இருக்கவேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.படத்தில் சொல்லும் வழிமுறை விமர்சனங்களுக்குட்பட்டது என்றாலும் கலைவடிவத்தில் அவருடைய போராட்டம் வரவேற்புக்குரியது.

– ஈசன்

Related Posts