விமர்சனம்

ஜிகிரிதோஸ்த் – திரைப்பட விமர்சனம்

மூன்று நண்பர்கள் இன்பச்சுற்றுலா செல்கிறார்கள். அவர்கள் போகும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதைப் பார்க்கின்றனர்.உடனே பயணத்தைத் தொடர்வதை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முனைகின்றனர்.அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? என்பதைச் சொல்வதுதான் ஜிகிரிதோஸ்த்.

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன்,படத்தின் இயக்குநர் வி.அரண்,வி.ஜே.ஆஷிக் ஆகியோர்தாம் அந்த மூன்று நண்பர்கள் வேடத்தில் நடித்திருக்கின்றனர்.இவர்களில் வி.அரண் பொறியியல் கல்லூரி மாணவர்.அவர் மின்னணு சாதனம் கண்டுபிடித்திருக்கிறார். அதன் மூலம் 500 மீட்டர் சுற்றளவில் நடக்கும் கைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். இதை வைத்துக் கொண்டு படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

நண்பர்களாக நடித்திருக்கும் மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்று காட்டியிருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மட்டுமின்றி அதிரடிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்கள்.

ஷாரிக்கின் காதலியாக நடித்திருக்கும் அம்முஅபிராமி அதையும் தாண்டி ஆண் நண்பர்களுக்கு இணையான இன்னொரு நண்பராக இருக்கிறார். அவருடைய வேடம் இளம்பெண்களுக்கு உத்வேகம் தரக்கூடியது.திரைக்கதைக்குத் திருப்புமுனை தரும் அந்த வேடத்துக்குத் தன் நடிப்பின் மூலம் மேலும் பலம் சேர்த்திருக்கிறார்.

பவித்ர லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா,மறைந்த ஆர்.என்.ஆர். மனோகர், சரத், துரை சுதாகர் ஆகிய நடிகர்களும் படத்தில் இருக்கின்றனர். அவரவர் பிம்பத்துக்கேற்ற வேடம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவர்களும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஆர்.வி.சரண் ஒளிப்பதிவில்,பருந்துப்பார்வையில் விரியும் காட்சிகளும் சரி,சின்ன அறைக்குள் நடக்கும் நிகழ்வுகளும் சரி, தெளிவும் துல்லியமும் கொண்டிருக்கின்றன.

அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.
மகேஷ் மேத்யூவின் சண்டைப்பயிற்சி நடிகர்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

அருள்மொழிவர்மனின் படத்தொகுப்பு படத்தை இலகுவாகக் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

ஓர் எளிய கதைக்குள்,கடத்தல், தீவிரவாதம், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல அம்சங்களைக் கலந்து விறுவிறுப்பான படம் கொடுக்க விழைந்திருக்கிறார் இயக்குநர் வி.அரண்.இதற்குள் இணைந்திருக்கும் இளமைத்துடிப்பு பலம்.

– தனா

Related Posts