சபாநாயகன் – திரைப்பட விமர்சனம்
பள்ளி இறுதியாண்டு, கல்லூரியில் இளங்கலை அதன்பின் முதுகலை.இது கல்வி கற்கும் வரிசை. இதைக் காதலிக்கும் வரிசையாக மாற்றி அதற்குள் நடக்கும் சுகமான மற்றும் சோகமான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கும் படம் சபாநாயகன்.
படத்தில் நாயகன் அசோக்செல்வனின் பெயர் ச.பா.அரவிந்த். அதனால் அவரை சபா என்று கூப்பிடுகிறார்கள்.அவர்தான் நாயகன் என்பதால் சபாநாயகன்.
அசோக்செல்வனுக்கு மூன்றுவித தோற்றங்கள் அனைத்திலும் காதலிக்கும் வாய்ப்பு.அருமையான வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி தானும் மகிழ்ந்து படம் பார்ப்போரையும் மகிழ வைக்கிறார். அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்.தன் காதல்கதைகளை ஏற்ற இறக்கங்களோடு சொல்லும்போது அவருடைய உணர்வுகளைப் பார்வையாளர்களுக்கும் பற்ற வைக்கிறார்.
கார்த்திகாமுரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் ஆகிய மூன்று நாயகிகள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்.அனைவரும் இளைஞர்களை ஈர்க்கும் இரகம்.இவர்களில் கார்த்திகாமுரளிதரனுக்கு இரட்டை வாய்ப்பு. இரண்டிலும் இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார்.
பிரபல யூடியூப் சேனல்களான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் ஜெய்சீலன், சர்டிஃபைடு ராஸ்கல்ஸ் ஸ்ரீராம் ஆகியோர் திரைத்துறையிலும் வலம்வரத் தகுதியானோர் என்று காட்டியிருக்கிறார்கள். மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் ஆகியோரும் தத்தம் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் இடம்பெறும் மூன்று காலகட்டங்களுக்கும் மூன்று வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள்.ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர்கள் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.இதனால் காலமாற்றம் காட்சிகளிலும் தெரிகிறது.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் இரசிக்கும் வகை.பின்னணி இசையில் இதம்.
படத்தொகுப்பாளர் கணேஷ் இரண்டாம்பாதியில் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் எழுதி இயக்கியிருக்கிறார். இவர் கமல்ஹாசனிடம் பணியாற்றியவர். கமலின் புகழ்பெற்ற பாடலின் ஒருவரியான, காதல்போன சாதலா இன்னொரு காதல் இல்லையா என்கிற கேள்வியை ஒரு முழுநீளப்படமாக்கி காதல்தோல்வி இளைஞர்கள் உயிர்காக்க முனைந்திருக்கிறார்.
மூன்று காலகட்டம் மூன்று காதல்கள் ஆகியன ஏற்கெனவே வந்துவிட்டன என்பதால் கடைசியில் மாற்றி யோசித்து புதுசாக்கியிருப்பது அவருடைய தனித்தன்மை.
– ஆநிரையன்











