விமர்சனம்

யு டர்ன் – திரைப்பட விமர்சனம்

பத்திரிகையாளரான சமந்தா, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து எழுத விழைகிறார்.

அது தொடர்பான விவரங்கள் தேடி அவர் போகப்போக திரைக்கதையும் விரிகிறது.

படம் முழுக்க நிறைந்திருக்கும் சமந்தா, காதல் பாசம் பயம் ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார்.

நடக்கும் தொடர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுத்தே தீருவேன் என திடசங்கற்பம் பூண்டிருந்தாலும், அம்மா பயமாயிருக்கும்மா? அவர் சொல்லும்போது நமக்கு அடிவயிறு கலங்குகிறது.

காவல்துறை அதிகாரிகளாக வருகிற ஆடுகளம் நரேன் மற்றும் ஆதி ஆகியோர் நடிப்பு சிறப்பு.

எதையாவது சொல்லி வழக்கை முடித்தால் போதும் என்று நினைக்கும் ஆடுகளம் நரேன், வழக்கை முடிக்கவேண்டும் என்பதை விட உண்மையைக் கண்டறியவேண்டும் என்று துடிக்கிற ஆதி. ஒரே துறையில் இருந்தாலும் அதற்குள் இருவேறு மனநிலைகளைத் தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.

பூமிகா, நரேன், ராகுல் ரவீந்திரன் ஆகியோர் திரைக்கதைக்குப் பெரும் பலம்.

நிகேத்பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.

அநாவசியமாகப் பயமுறுத்தாமல் உள்ளத்துடிப்பை எகிற வைக்கிறது பூர்ண சந்திர தேஜஸ்வியின் பின்னணி இசை.

மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை என்றாலும்,ஒரு புள்ளியளவு கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுநீளப் படத்துக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைக்க முடியும் என்பதைக் காட்டியிருப்பதோடு, சாலை விதிகளை மீறி நாம் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட எவ்வளவு பெரிய இழப்புகளையும் வலிகளையும் உருவாக்கும் என்பதைச் செவிட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பவன்குமார்.

அரசு போக்குவரத்துத் துறை இந்தப் படத்தை சொந்தச் செலவில் விளம்பரம் செய்து மக்களிடம் சேர்க்கலாம்.

சமந்தாவின் அழகு மற்றும் அருமையான நடிப்பு, பூமிகாவின் தாய்ப்பாசம், நரேனின் தவிப்பு ஆகியனவற்றை மீறி சாலைவிதிகளை மீறக்கூடாது என்கிற எண்ணம் ஆழமாகப் பதிகிறது.

Related Posts