September 14, 2026
விமர்சனம்

99/66 – திரைப்பட விமர்சனம்

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் 66 ஆம் எண் வீட்டில் வசிக்கும் நாயகிக்கும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் 99 ஆம் எண் வீட்டில் வசிக்கும் பெண்மணிக்கும் நட்பு.அதனால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.அவை என்ன? அவற்றின் விளைவென்ன? என்பனவற்றை திகிலுடன் சொல்லியிருக்கும் படம்தான் 99/66.

நாயகியாக நடித்திருக்கும் ரக்சிதா மகாலட்சுமி படத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.கணவருடன் அன்பாக இருப்பது தோழியுடன் இயல்பாக இருப்பது என அமைதியாக இருக்கும் அவர் ஒருகட்டத்தில் ஆக்ரோசமாகிறார்.எல்லா இடங்களிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதாவுக்கு, வழக்கமான பெண்மணி வேடம் கொடுக்காமல் புத்தமதத்தை அதன் அடிப்படைத் தத்துவமான அன்பை மட்டுமே கடைபிடிக்கும் வேடம்.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.

நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் ஆகிய இருவரும் புதுமுகங்கள்.அவர்களுக்கு மாறுபட்ட கணவர்கள் வேடம்.அந்த வேடத்துக்கு அவர்கள் தோற்றமும் நடிப்பும் உதவியிருக்கிறது.

சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோர் சிரிக்க வைப்பதற்காக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அதை அங்கங்கே நிறைவேற்றியிருக்கிறார்கள்.

சிறப்புத் தோற்றத்தில் வரும் கே.ஆர்.விஜயா,பவன் கிருஷ்ணா, இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி,தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோரது வேடங்கள் அளவாக எழுதப்பட்டிருக்கின்றன.அதற்குரிய நடிப்பைக் கொடுத்து நற்பெயர் பெறுகிறார்கள்.

அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றியே படமாக்கவேண்டியிருந்தாலும் அதிலும் பல மாற்றங்களைக் காட்டி இரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா.

மீனாட்சி சுந்தரத்தின் படத்தொகுப்பு படத்தை போரடிக்காமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.ஜெயமுருகனின் கலை இயக்கம் கதைக் களத்திற்குப் பலம் சேர்க்கிறது.

சாதி தேவையில்லை,அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும் ஆகிய உயரிய கருத்துகளைச் சொல்ல வேண்டுமென்பதற்காக திகில் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நாயகி மீதான தொடர் கொலை முயற்சியும் அவற்றிலிருந்து அவர் தப்பிக்கும் விதங்களும்,நட்பாகப் பழகிக் கொண்டிருக்கும் 99 ஆம் எண் வீட்டில் ஆளே இல்லை, குடியிருப்புச் சங்கத்தின் தலைவராகவும் நடித்திருக்கும் இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தியின் இரவுநேரப் பயணங்கள் ஆகிய விசயங்களைக் கலந்து சுவாரசியமான திரைக்கதை அமைத்திருக்கிறார்.

திகில் பட பிரியர்களுக்கு கோழி 65 சாப்பிட்ட நிறைவு.

– இளையவன்

Related Posts