418 – திரைப்பட விமர்சனம்
ஒரு மருத்துவக் கல்லூரி விடுதி பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கிறது.தேவை காரணமாக அந்த விடுதி மீண்டும் திறக்கப்படுகிறது.அப்போது நிர்வாகத்தினரால்,இரண்டு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.ஒன்று,அந்த விடுதி மாணவர்களுக்கு மட்டுமே மாணவிகளுக்கு இல்லை என்பது மட்டுமில்லை ஒரு மாணவியோ அல்லது ஒரு பெண்ணோ கூட அந்த விடுதிக்குள் நுழையக்கூடாது.இன்னொன்று, அந்த விடுதியின் 418 எண் கொண்ட அறைக்குள் எக்காரணம் கொண்டும் யாரும் செல்லக்கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
யாரும் போகக்கூடாது என்று சொன்னால் போய்ப்பார்ப்போம் என்கிற ஆர்வம் மாணவர்களுக்கு வரும்தானே.அறை எண் 417 இல் தங்கும் மாணவர்,418 இன் இரகசியங்களை அறிய முற்படுகிறார்.அவர் வழியே இரசிகர்களுக்கும் கதை சொல்லப்படுகிறது.
படத்தின் நாயகியாக நடித்திருக்கும் சைத்ரா ஆச்சார்தான் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடித்தாக வேண்டும் எனும் நிலை.அதை மிகப்பொறுப்பாகச் செய்திருக்கிறார்.ஒரு சாதாரண பெண்மணி அசாதாரண சூழல்களைச் சந்திக்கும்போது எப்படியெல்லாம் நடந்து கொள்வார் என்பதை தத்ரூபமாகச் செய்திருக்கிறார்.
மர்மத்தைத் தேடிப்போகும் மாணவராக நடித்திருக்கும் சரண் லக்கராஜு,விசித்திரமான பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்படக்கூடியவராக நடித்திருக்கிறார்.வேடத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.
அந்த அறைக்குள் நான் போயே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து அதனால் பல சிக்கல்களைச் சந்திக்கும் பெண்ணாக நடித்திருக்கும் ப்ரித்திபகதாலா நன்று.
சூர்ய ராஜ் வீரபத்தினி,சஷாங்க் பாட்டீல், ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோரும் தங்கள் பங்குக்கு பயந்து,நம்மையும் பயமுறுத்துகிறார்கள்.
தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பெரும்பாலும் இருட்டிலேயே படமாக்கவேண்டியிருப்பினும் அதிலும் நேர்த்தி காட்டியிருக்கிறார்.ஒளியமைப்புகளில் அவ்வளவு கவனம் செலுத்தியிருக்கிறார்.
இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசைதான் தூணாக இருக்கும் என்பதற்கு வெங்கியின் இசையும் விதிவிலக்கன்று.பார்வையாளர்களின் படபடப்பை அதிகரிக்கிறார்.
படத்தைத் தொகுத்திருக்கும் அகுல் அவினாஷ்,பல குழப்பமான காட்சிகள் இரசிகர்களுக்கு எளிதில் புரியும்படி இருக்கவேண்டுமென பக்குவமாகத் தொகுத்து வழங்க மெனக்கெட்டிருக்கிறார்.
நாட்டுப்புறக் கலைஞர்,குழந்தை பிறப்பதில் சிக்கல் ஆகிய இருவிசயங்களை பிரதானமாக வைத்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் கீர்த்தன் நடகவுடா.படத்தின் மையமான பெண்ணை நாட்டுப்புறக் கலைஞர் என்று வைத்திருப்பதால் பல காட்சிகளை நியாயப்படுத்த முடிகிறது.முற்றிலும் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட கதையெனினும் இதுபோன்ற கதைகள் ஏராளமாக நாட்டுப்புறங்களில் புழங்குகின்றன என்பதை இப்படம் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
– குமரன்











