சூர்யா படத்தை எச்.வினோத் இயக்கவில்லை – ஏன்?
மலையாள இயக்குநர் ஜீத்துமாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சீன்.இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்துக்கு அடுத்து,த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.கயாடு லோஹர் படத்தின் நாயகியாக நடிக்கிறார்.மேலும், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சாய் அபயங்கர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கே.கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும், பா.கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்கவிழா ஜூன் மாதமும் படப்பிடிப்பு ஜூலையிலும் தொடங்கியது.
இந்தப்படத்துக்கு அடுத்து ட்ரீம்வாரியர் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்கிறார் சூர்யா என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கியிருந்தார் எச்.வினோத்.அப்போதே அந்நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் இயக்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது என்றார்கள்.அதில் ஒரு படமாக இப்போது சூர்யா படத்தை இயக்கவுள்ளார் எச்.வினோத் என்று சொல்லப்பட்டது.
ஜனநாயகன் பட வெளியீட்டுக்கு முன்பாகவே இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன.அப்போது அவர் சொன்ன மையக்கதை பிடித்துப்போனதால் சூர்யாவும் படநிறுவனமும் அவரை இயக்க வைக்க முடிவு செய்தார்கள் என்றும் சொல்லப்பட்டது.
அதற்கடுத்து,டிசி படத்தின் நாயகி வாமிகாகபி இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
இதெல்லாம் போனமாசம்,ஆனால் இந்தமாசம்?
எச்.வினோத் சூர்யா படத்தை இயக்கவில்லையாம்.
ஏன்?
முதலில் எச்.வினோத் சொன்ன மையக்கதை பிடித்துத்தான் அவரை இயக்குநராக்க முடிவு செய்தார்களாம்.அதன்பின்,அதை முழுநீள திரைக்கதையாக எழுத அவருக்குக் கால அவகாசம் கொடுத்தார்களாம்.அவரும் எழுதியிருக்கிறார்.
அது படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு திருப்தியாக இல்லை என்று சொல்லப்படுகிறது.அதன்பின்,பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகளிலும் சுமுகமுடிவு எட்டப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால்,எச்.வினோத் வேண்டாம் என்கிற முடிவுக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது என்றும் அந்த முடிவை சூர்யாவும் ஏற்றுக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
திரைக்கதை திருப்தியில்லை என்று சொல்லப்பட்டாலும் எச்.வினோத் கேட்ட சம்பளமும் முக்கிய சிக்கலாக இருந்ததென்றும் சொல்லப்படுகிறது.
இதனால்,ஜனநாயகன் படத்துக்கு அடுத்து சூர்யா படம் என்கிற மகிழ்ச்சியில் இருந்த எச்.வினோத்துக்கு அதிர்ச்சி.ஏனெனில்,ஏற்கெனவே கமலுடன் ஒரு படம் என்று சொல்லப்பட்டு அதுவும் இல்லையென ஆனது.இப்போது சூர்யாவுடன் ஒரு படம் என்று சொல்லப்பட்டு அதுவும் இல்லையென ஆகிவிட்டது.
எனவே,இப்போதைக்கு தமிழில் அவர் படம் இயக்கமுடியாது,தெலுங்கு, இந்தி என்று ஏதாவது வேறொரு மொழி நடிகருடன் இணையவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.இதுதான் அவருடைய அதிர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்.











