October 15, 2026
விமர்சனம்

ஜெயிலர் 2 – திரைப்பட விமர்சனம்

உண்மைக்கும் நேர்மைக்கும் உயிர் கொடுக்கும் முன்னாள் சிறைக்காவலர் டைகர் முத்துவேல்பாண்டியன்,தன் மகனே ஆனாலும் தப்பான வழியில் போனதால் சுட்டுக்கொல்கிறார்.இதுதான் ஜெயிலர் படத்தின் கதை.

அதன் தொடர்ச்சியாக வந்திருக்கும் இந்தப்படத்தில்,மகனுடன் தொடர்பிலிருந்த சிறைக்கடத்தல் கூட்டத்தின் வேர் தேடிப்போகிறார் டைகர் முத்துவேல் பாண்டியன்.அந்தப்பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருப்பதுதான் ஜெயிலர் 2.

அமைதியான தோற்றம்,மதிப்புமிகு பார்வை,தீயோரைக் காணும்போது கண்களில் தெரியும் கூர்மை என எல்லாக்காட்சிகளிலும் இரசிகர்களை ஈர்த்திருக்கிறார் ரஜினிகாந்த்.பல படங்களாக விட்டிருந்த புகையை இந்தப்படத்தில் மீண்டும் பிடித்திருப்பதுதான் நெருடல்.அதேசமயம்,அதை உயரே தூக்கிப்போட்டு வாயில் பிடித்துக் கொண்டு அவர் பேசும் வசனம்,திரையிலும் திரைக்கு வெளியேயும் பல அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியது.

ஜெயிலரில் விநாயகன் வில்லனாக இருந்தார்.இந்தப்படத்தில் அவருடைய இடத்தில் சுராஜ்வெஞ்சமரடு இருக்கிறார்.அந்த வேடத்துக்குத் தக்க நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

ரஜினியின் மனைவியாக ரம்யாகிருஷ்ணன்,மருமகளாக மிர்னாமேனன் ஆகியோர் அதேபோன்று நடித்திருக்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா,இந்திநடிகர் மிதுன்சக்ரவர்த்தி,வித்யாபாலன் ஆகியோரும் எதிர்மறைக் கதாபாத்திரங்களை ஏற்று மிரட்டியிருக்கிறார்கள்.எஸ்.ஜே.சூர்யாவின் மிகைநடிப்பும்,மிதுன்சக்ரவர்த்தியின் பொறுமையும்,வித்யாபாலனின் புகைப்பழக்கமும் அவர்களுடைய கதாபாத்திரங்களைக் கவனிக்க வைக்கும் அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

பூர்ணா மற்றும் நேரா ஃபதேஹி ஆகியோர் தலா ஒருபாடலுக்கு நடனமாடியிருக்கிறார்கள்.அது அவர்களுக்கும் படத்துக்கும் பலம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.

யோகிபாபு மற்றும் நமோநாராயணா ஆகிய இருவரும் வாய்விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

முதல்பாகத்தைப் போன்றே மோகன்லால்,சிவராஜ்குமார்,ஜாக்கிஷெராஃப் ஆகிய மூவரும் இதிலும் சிறப்புத் தோற்றத்தில் வந்து படத்துக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

ஏழுநிமிடங்கள் வரும் இந்திநடிகர் ஹிருத்திக்ரோசனின் காட்சிகள்,ரஜினி இரசிகர்களுக்கு விருந்து.

கடைசிக்காட்சியில் தோன்றி அடுத்தபாகத்தில் நான்தான் என்பதுபோல் சிரித்திருக்கிறார் விஜய்சேதுபதி.

விஜய்கார்த்திக்கண்ணனின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் தெறிக்கின்றன.கணினி வரைகலைக்காட்சிகள் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கவேண்டும்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் படத்தின் தன்மையை உயர்த்திப்பிடித்திருக்கின்றன.

படத்தைத் தொகுத்திருக்கும் ஆர்.நிர்மல்,இரண்டாம்பாதியை இன்னும் செதுக்கியிருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் நெல்சன்,ஓர் ஓய்வுபெற்ற சிறைக்காவலரை கதாநாயகனாக வைத்துக் கொண்டு பெரும்வலிமை மிக்க கூட்டத்தை வேரறுக்க வைத்திருக்கிறார்.அதற்கேற்ப காட்சிகள்,சண்டைக்காட்சிகள்,துணை கதாபாத்திரங்கள் ஆகியனவற்றைப் பார்த்துப் பார்த்து கோர்த்திருக்கிறார்.ரஜினியின் பிம்பத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்தத் திரைக்கதை ரஜினி இரசிகர்களுக்குப் பெரும் விழாவாகவும் திரைப்பட இரசிகர்களுக்கு திருவிழாவாகவும் அமைந்திருக்கிறது.

– வெற்றி

Related Posts