ஜெயம்ரவி மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் – விவரம்
நடிகர் தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டதால், அவருடைய புதிய படத்தின் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதித்தது.அதன்பின் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இப்போது நடிகர் ஜெயம்ரவி மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதேபோன்றதொரு புகார் செய்யப்பட்டிருக்கிறதாம்.
என்ன புகார்?
2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான படம் சைரன்.அப்படத்தைத் தயாரித்தது அவருடைய மாமியார் சுஜாதா.
அப்படம் வெளியாகும் நேரத்தில்,பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.கடைசிநேரத்தில் அதைத் தீர்க்க ஜெயம்ரவி உதவினார்.
அப்போது படத்தை வெளியிட ஐந்துகோடி பற்றாக்குறை ஏற்பட்டதாம்.அதனால்,தயாரிப்பாளர் சுஜாதாவின் தயாரிப்பில் இன்னொருபடம் நடிக்க ஒப்புக்கொள்வதாக ஜெயம்ரவி கடிதம் கொடுத்தார்.அந்தக் கடிதத்தின் அடிப்படையில் இன்னொரு தயாரிப்பாளரும் நிதியாளருமான ஒருவர்,ஐந்து கோடி பணம் கொடுத்தார் என்றும் அதனால் அந்தப்படம் வெளியானது என்றும் சொல்லப்பட்டது.
அப்படம் வெளியாகி இரண்டாண்டுகள் கடந்துவிட்டபோதும்,அந்தப்பணத்துக்கு ஒரு விடையும் கிடைக்கவில்லையாம்.ஏனெனில்,சைரன் படம் வெளியான சில வாரங்களிலேயே ஜெயம்ரவி குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் அனைவரும் அறிந்ததுதான்.அதனால்,சுஜாதா தயாரிப்பில் படம் நடிக்கமுடியாது என்று ஜெயம்ரவி சொல்லிவிட்டார்.
இதனால்,அந்தப்பணத்தைத் திருப்பிக்கொடுக்க சுஜாதாவால் இயலவில்லையாம்.கொடுத்தவர் கேட்டபோது,ஜெயம்ரவியின் வியாபார எல்லைக்கு மீறி அதிகப் பொருட்செலவில் அவரை வைத்துப் படமெடுத்தேன்.அவருடைய மதிப்பை உயர்த்துவதற்காகவே நான் அப்படிச் செய்தேன்.அந்தப்படத்தால் எனக்கு எந்த இலாபமும் இல்லை.மாறாக நட்டத்தை மட்டுமே சந்தித்தேன்.அது ஜெயம்ரவிக்கு நன்றாகத் தெரியும்.அதனால்தான்,அந்தப் படத்தின் நட்டத்திற்கு ஈடுகட்ட இன்னொரு படம் நடிப்பதாக ஒப்புக்கொண்டார்.இப்போது நடிக்க மறுக்கிறார்.அவர் மாற்றிப் பேசுகிறார்.இப்போது நான் என்ன செய்வது? அந்தப்பணத்துக்கு அவர்தான் பொறுப்பு என்று சொல்லி கைவிரித்தாராம்.
ஜெயம்ரவியிடம் கேட்டால்,நானா உங்களிடம் பணம் வாங்கினேன்? கொடுத்தவரிடம் கேளுங்கள் என்று சொல்கிறாராம்.
இதனால்,பணம் கொடுத்தவர் நிலை கவலைக்கிடமாகிவிட்டது.ஏனெனில்,இவர்கள் குடும்பச் சிக்கல் நீடிக்கிறது.அதனால் சுஜாதா தயாரிப்பில் ஜெயம்ரவி இன்னொரு படம் நடிப்பதென்பது எப்போதுமே நடக்காத ஒன்றாகிவிட்டது.
அப்படியானால் பணத்துக்கு என்ன விடை? என்பது தெரியாமல் தவித்தவர்,பொறுத்தது போதுமென முடிவு செய்தே,இப்போது தயாரிப்பாளர் சுஜாதா,நடிகர் ஜெயம்ரவி ஆகிய இருவர் மீதும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் நடக்குமென்று சொல்லப்படுகிறது.











