கபெரணசிங்கம் படம் திருட்டு – இயக்குநர் வேதனை
அக்டோபர் இரண்டு முதல் வெளியாகி இருக்கும் திரைப்படம் க/பெ ரணசிங்கம்.
விஜய்சேதுபதி ஜஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலரது நடிப்பில் சண்முகம் முத்துசாமி திரைக்கதை வசனத்தில்
பெ விருமாண்டி இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இந்தப்படம் இதுவரைக்கும் சொல்லப்படாத ஒரு கதையை மக்களின் பிரச்சினையை மிகத்தீவிரமாகப் பேசுவதால் சினிமா ரசிகர்களின் குறிப்பாக பெண்களின் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஆனால் படம் வெளியான மறுநாளே சில திருட்டு இணையதளங்களிலும் படம் வெளியானது.
அதேநேரம் தென் மாவட்டங்களில் சில உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் படம் ஒளிபரப்பப்பட்டதாக செய்தியறிந்து இயக்குனர் விருமாண்டியும் வசனகர்த்தா சண்முகம் முத்துசாமியும் உடனடியாக ராஜபாளையம் சென்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த திரைப்படத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக நடித்துள்ள பாலமுரளி வர்மன் என்பவர் திருட்டு இணையதளங்களையும் அதில் படம் பார்ப்பவர்களையும் கடுமையாக விமர்சித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

பாலமுரளி வர்மன் பிரபல இயக்குனர்களிடம் துணை, இணை இயக்குனராகவும்
கதை வசனகர்த்தாவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் வெளியிட்டுள்ள காணொளியில் பேசி இருப்பதாவது,,,,
சமூக அக்கறை உள்ள திரைப்படம் தயாரிக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து கே ஜே ஆர் ஸ்டுடியோ திரு ராஜேஷ் அவர்கள் நல்ல படங்களை தயாரித்து வருகிறார்.
திரைப்படம் எனும் வலிமையான ஊடகத்தின் வாயிலாக சமூக அக்கறையுள்ள படங்களை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
திரையுலகு முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஜி ப்ளக்ஸில் 199 ரூபாய் செலுத்தி எத்தனை பேர் வேண்டுமானாலும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய வகையில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
இந்த நேரத்திலும் திருட்டு இணையதளங்கள் வழியாக படம் பார்ப்பவர்களிடம்
நான் கேட்பது,
உங்கள் வீட்டில் பணம் நகை காணாமல் போனால் பதறுகிறீர்கள்.
சிறுக சிறுக சேமித்த பணத்தை படுபாவி யாரோ திருடி விட்டானே கொள்ளையடித்து விட்டானே என்று கதறுகிறீர்கள்
உங்கள் வீட்டில் பணமோ பொருளோ நகையோ போனால் அது திருட்டு. உங்களுக்கு அது இழப்பு.
ஆனால் நீங்கள் அடுத்தவர் சொத்தை எடுத்தால் அதன் பெயர் என்ன?அதுவும் திருட்டு தான் என்பதை ஏன் நீங்கள் அறியவில்லை.?
பெரும்பொருள் முதலீட்டில்
அறிவைச் செலுத்தி கடும் உழைப்பை செலுத்தி மக்களுக்காக சிந்தித்து மக்களுக்காக எழுதி ஒரு நல்ல மக்கள் படைப்பை மக்கள் முன் கொண்டு வரும்போது மக்களாகிய உங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் இப்படி திருட்டு இணையதளங்களிலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் படம் பார்ப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது உழைப்பை மதிக்க தெரியாத அடிப்படை நேர்மையற்ற ஒரு வஞ்சக சுயநல சமூகமாக நாம் மாறிவிட்டோம்.
விவசாயம் செய்ய முடியாத இந்த நாட்டில் மழை வருமா வராதா காவிரி தண்ணீர் வருமா வராதா என எதிர்பார்த்து ஏங்கி காவிரி தண்ணீர் வரும் மேட்டூர் அணை திறக்கப்படும் என்கிற அரசின் அறிவிப்பை நம்பி விதைத்து கடுமையாக உழைத்து உயிரை உருக்கி பயிர் வளர்த்து அதை அறுவடை செய்யும் நிலையில் அந்த வயல் முற்றிலுமாக அழிக்கப்பட்டு இருந்தால் அல்லது அறுவடை செய்து தானியங்களை சேகரித்து வைத்திருக்கும் போது திருடர்கள் வந்து அதை வாரி எடுத்துச் சென்றிருந்தால் ஒரு விவசாயி என்ன பாதிப்புக்குள்ளாவானோ அவனுடைய மனம் எந்தளவுக்கு வேதனைப்படுமோ அதே அளவிற்கு தான் நாங்களும் பாதிக்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம்.
ஒரு திரைப்படத்திற்காக ஒருவர் பணம் திரட்டி முதலீடு செய்து ஒருவர் அறிவை செலுத்தி கதை சிந்தித்து பலர் கூடி உழைத்து அதை கொண்டு வந்து மக்களிடம் சேர்க்கின்ற போது நிழல் போல எங்கிருந்தோ உட்கார்ந்த இடத்திலிருந்து அந்த படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிற அயோக்கியர்கள், உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் சில உள்ளூர் திருடர்களுக்கு படம் பார்ப்பதன் மூலம் நீங்களும் துணை போகிறீர்கள் என்றால் நீங்களும் அந்த திருட்டுக் குற்றத்தில் பங்கு பெற்று இருக்கிறீர்கள் என்பதுதான் பொருள்.
திருட்டுப் பொருளை வாங்குவதும் திருடனுக்கு உடந்தையாக இருப்பதும் ஒன்றுதான்.
ஒரு படைப்பை கொல்வதும் படைப்பாளியின் அறிவையும் உழைப்பையும் திருடுவதும் கொலைக் குற்றத்திற்கு சமமான ஒன்று தாம்.
சிறுவயதிலிருந்து வளர்த்த உங்கள் மகளை ஒருவன் விரும்பி கூட்டிச்சென்றுவிட்டால்,
இழுத்துக் கொண்டு ஓடினான் என்று கதறுகிறீர்கள் இன்னும் பலர் சாதியை காரணம் காட்டி கொலையும் செய்கிறார்கள்.
நான் பெற்று வளர்த்த என் மகளை எப்படி வாழ வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று ஆவேசமாக கொந்தளிக்கும் நீங்கள் இன்னொருவர் சொத்தை பெரும் முதலீட்டில் உருவான ஒரு அறிவுச் சொத்தை அவர்கள் அனுமதியின்றி நுகரலாமா? களவாடலாமா?
அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள் சுரண்டுகிறார்கள் என்று எந்த அடிப்படையில் நீங்கள் பேச முடியும்?
திருடர்களை கூட குற்றம் சாட்டுகிற தகுதியை நாம் எல்லோருமே இழந்து விட்டோம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
திரையரங்குகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்துகொண்டே இருந்தது. இப்போது திரையரங்குகளே இல்லை.
200 ரூபாய் கொடுத்து ஜி ப்ளக்ஸ் மூலம் ஐந்து பேரோ 10 பேரோ குடும்பத்தினர் அனைவருமோ பார்க்க முடியும் என்கிற வசதியை இந்த இணைய ஒளிபரப்புத் தளங்கள் வழங்குகின்றன.
பல்வேறு ஓ டி டி தளங்கள் மூலமாக படங்கள் வெளியாகின்றன. இப்போதும்கூட திருடர்களை ஆதரிப்போம் திருட்டு வழிகளிலும் படம் பார்ப்போம் என்பது எந்த வகையில் நியாயம்?
திரையரங்கில் விலை அதிகம் என்று சொல்லப்பட்டபோதே திருட்டு இணையதளங்களை நீங்கள் ஆதரித்திருந்தாலும் அது தவறுதான்.
திருடுகிறவர்களின் நியாயம் என்று எதையும் சட்டமும் சமூகமும் ஏற்கமுடியாது.
விவசாயம் செய்ய முடியாத இந்த நாட்டில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார்கள். வாழ முடியவில்லை கடன் பிரச்சினைகள் வங்கி மற்றும் கந்துவட்டிக்காரன்கள்
தொல்லை,
நம்பிய இயற்கையும் கைவிட்டுவிட்டது எனவே இனி வாழ முடியாது என்று பலர் தற்கொலை செய்து கொண்டார்கள்.
என்னை வாழ வைக்கவில்லை
என்னை வாழவிடவில்லை என்று சொல்லி என்னை வாழ விடாத உங்கள் வீட்டில் புகுந்து கொள்ளை அடிக்கிறேன் திருடுகிறேன் என்று யாரும் தவறான வழியில் மாறவில்லை.
அதுதானே அறம்?
என்னைவாழ வைக்காத இந்த நாட்டில் நான் வாழ மாட்டேன் டா என்று பலர் இறந்தார்கள் விவசாயத்தை விட்டுவிட்டு நிலத்தை விற்று விட்டு வெளியேறிய பலர் காவலாளிகளாக
கூலித் தொழிலாளிகளாக சுமை சுமக்கும் தொழிலாளர்களாக கட்டிட தொழிலாளர்களாக இன்னமும் பல மாநகரங்களிலும் நகரங்களிலும் சொந்த ஊரை விட்டு விட்டு வந்து அல்லல்படுவதை பார்க்கிறோம் அப்போதும்கூட உழைத்து வாழ்வோம் என்ற முடிவுக்கு தான் பலர் வந்தனர்.
சிலர்,
நிலம் என்பது மானம் என் மானம் போய் விட்டது நான் இனி வாழ மாட்டேன் என்கிற ஒரு உணர்ச்சிகரமான முடிவுக்கும் தற்கொலை முடிவுக்கும் வந்தார்களே தவிர
எந்த விவசாயியும் திருடர்களாகவோ அடுத்தவர் சொத்தை அபகரிக்கிறவர்களாகவோ மாறவில்லை.
ஒருபோதும் மாற மாட்டார்கள்.
ஏனென்றால் உலகை மனிதர்களை உயிர்களை வாழவைக்கும் உன்னதமான கடவுள்கள் வேளாண் குடி மக்கள்.
அவர்கள் போட்ட சோத்தை தின்று தானே வளர்ந்தோம் வாழ்கிறோம் அந்த அடிப்படை அறம் கொஞ்சமாவது நமக்கும் இருக்க வேணாமா?
பசிக்கிறது என்பதற்காக பக்கத்து வீட்டினுள் புகுந்து அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் தட்டைப் பறித்து உணவை திருடி தினமும் அப்படி வாழ்ந்து விட முடியுமா உங்களால்?
அப்படி வாழ்ந்தால் உங்களால் அது வாழ்க்கையா?அப்படி பிழைத்து
நிம்மதியாக உறங்க முடியுமா?
உங்கள் குடும்பத்தோடு உங்கள் பெண்டு பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவீர்களா?
அந்த இழிசெயலுக்கு சமமானது தானே இன்னொருவரது சொத்தை உழைப்பை முதலீட்டை எடுத்து அதன் மூலமாக திருட்டுத்தனமாக சம்பாதிப்பதும்?
திருட்டு வழியில் ஒளிபரப்பி
இப்படி சம்பாதித்து நீங்கள் அந்த பணத்தை எங்கே கொண்டு போய் கொடுப்பீர்கள்?கடைசியாக மருத்துவமனையில் தான் கொடுக்க முடியும்!
திருட்டு விசிடி திருட்டு டிவிடி என்று இருந்த காலத்தில் கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் ஒரு கன்னடப் படம் கூட கிடைக்காது.
விற்க முடியாது.
தமிழ் படங்கள் விற்பார்கள்.
அவர்களே விற்க சொல்வார்கள்.
கன்னட படம் விற்றால் அந்த கடை அடித்து நொறுக்கப்பட்டது.
அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்தது.
சில அமைப்புகளும் செயல்பட்டார்கள்.
தமிழ்நாட்டில் ஏன் இன்றுவரை எதுவும் செய்யமுடியவில்லை?
ஆபாச இணையதளங்களை அரசு தடுத்தது
மிகுந்த அவசியமான செயல்
பாராட்டுக்குரிய செயல்.
தொடர்ந்து
சிறுமிகளும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.
காட்டுமிராண்டித்தனமான வெறிப்பிடித்த ஹத்ராஸ் மிருகங்கள் திரியும் ஒரு தேசத்தில் பாலியல் இணையதளங்கள் முடக்கப் படவேண்டியவை. அந்த மகத்தான பணியை செய்த அரசு பாராட்டுக்குரியது.
அந்த இணையதளங்களை முடக்க முடிகிறபோது திரைப்படங்களை பதிவேற்றும் திருட்டு இணைய தளங்களையும் முடக்க முடியுமல்லவா?
ஆனால் செய்வதில்லையே ஏன்?
இதனால் லாபமடைவது யார்?
திரைப்படத்துறை வாயிலாக
கேளிக்கை வரி
சேவை வரி
ஜிஎஸ்டி மற்றும் மாநகராட்சி வரி இதைத்தவிர திரையரங்குகளுக்கு பலவரிகள் என்று இன்னும் பல்வேறு வகைகளில் வரி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது.
தமிழ்த்திரைப்படத் துறையில் மட்டும் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் முதலீடாக சுழல்கிறது.
உலகிலேயே அதிக திரைப்படங்களை தயாரிக்கிற இந்தியத் திரைப்படத் துறையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
ஏன் இந்த திருட்டு இணையதளங்களை முடக்கும் பணியை யாரும் செய்யவும் செய்ய முன்வருவதில்லை?
திருட்டு இணையதளங்களுக்கும் இங்கு இருக்கின்ற பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கடந்த காலத்தில் எழுந்தன.
ஒரு தொழில் என்கின்ற அடிப்படையில்
தொழில் பாதுகாப்பு அறிவுச் சொத்து காப்பு
என்கிற எந்த அடிப்படை பாதுகாப்பும் இல்லாத ஆனால் பெரும் முதலீடுகளை கொண்டிருக்கிற ஒரு துறையை
நேரடியாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் மறைமுகமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் வாழவைக்கிற ஒரு துறையை காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்பு அரசுக்கு இல்லாமல் போனது ஏன்?
திரைத்துறையின் அத்தனை துறைகளும்
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு வரிவகைகளை செலுத்துகின்றன.
பேரிடர் காலத்தில் மக்களின் துன்ப துயரங்களை ஓரளவுக்கேனும் குறைத்ததில் அவர்களை உயிர்ப்பித்ததில்
திரைப்படங்களுக்கும் படைப்பாளிகளுக்கும்
அதில் நடித்த கலைஞர்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது.
கலையையும் பண்பாட்டையும் காப்பாற்றாத சமூகம் சீரழிந்த சமூகமாக பாழடைந்த சமூகமாக போய்விடும்.
எனவே
மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய ஐயா
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும்
செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் மரியாதைக்குரிய கடம்பூர் ராஜு அவர்களுக்கும் திரைத்துறை சார்பாக ஒரு கோரிக்கையை
முன்வைக்கிறேன்.
இப்போது
இணையதளங்களை கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் எளிதான ஒன்றுதான்.
தயாரிப்பாளர்களின் வலியும் வேதனையும் உங்களுக்கு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது நீங்களும் அறிவீர்கள்.
எனவே க/பெ ரணசிங்கம் என்ற எங்கள் திரைப்படத்திற்கு ஏற்பட்டது போன்ற நிலை
இனி எந்த ஒரு திரைப்படத்திற்கும் ஏற்படாத அளவிற்கு எங்கள் திரைப்படத்தை திருட்டு இணையதளங்களிலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புகிறவர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
படங்களை பதிவிறக்கம் செய்து சில செயலிகளின் மூலமும் ஃபேஸ்புக்,வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்கள்வழியாக பரப்புகிறவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முடங்கியிருக்கும் திரைத்துறை மலர்ச்சிபெற வழிவகை செய்யவேண்டும் என்று
தயாரிப்பாளர் சார்பாகவும் படைப்பாளிகள் சார்பாகவும் படக்குழுவினர் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
அரசு நடவடிக்கை எடுக்குமா?
குறுக்கு வழியை பின்பற்றுவோர் இதை உணர்ந்து திருந்துவார்களா? பார்ப்போம்.











