விஜய் என்னைச் சந்தித்தார் – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
டிசம்பர் 27 ஆம் தேதி இரவு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்திருக்கிறார். சுமார் அரைமணி நேரம் நடந்த அச்சந்திப்பின் போது, திரையுலகின் கஷ்டங்களை முதல்வரிடம் எடுத்துக்கூறிய விஜய், திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளிலும் மக்களை அனுமதிக்கும் அனுமதியை அரசு வழங்கினால்தான் திரையுலகம் மீண்டுவரும் வழி பிறக்கும். எனவே அதை நீங்கள் செய்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு (டிசம்பர் 28) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,தமிழகத்தில் திரையரங்குகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. அவற்றைத் திறப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நடிகர் விஜய் என்னைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டார் என்று கூறினார்.
இதன்மூலம் தமிழக முதல்வரை விஜய் சந்தித்தது உறுதி என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.











