தமிழக முதல்வரைச் சந்தித்த விஜய் – விரைவில் நல்ல செய்தி
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தயாராகி கிட்டத்தட்ட பத்துமாதங்கள் ஆகிவிட்டன. ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனாவால் எல்லாம் மாறிப்போய்விட்டது.
இப்போது பல்வேறு நிலைகளைக் கடந்து 2021 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்போதுவரை தமிழ்நாடு திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற அரசாணை அமலில் இருக்கிறது.
மாஸ்டர் படம் வெளியாகும் நேரத்திலும் இப்படியே இருந்தால் அது படத்தின் வசூலைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் நூறு விழுக்காடு இருக்கைகளையும் நிரப்ப அனுமதிக்கவேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையாக இருந்துவந்தது.
அரசுத்தரப்பிலிருந்து அதற்கு எவ்வித பதிலும் இல்லாமல் இருக்கிறது.
இந்நிலையில், நேற்றிரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்திருக்கிறார். சுமார் அரைமணி நேரம் நடந்த அச்சந்திப்பின் போது, திரையுலகின் கஷ்டங்களை முதல்வரிடம் எடுத்துக்கூறிய விஜய், திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளிலும் மக்களை அனுமதிக்கும் அனுமதியை அரசு வழங்கினால்தான் திரையுலகம் மீண்டுவரும் வழி பிறக்கும். எனவே அதை நீங்கள் செய்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
தமிழக முதல்வரும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருடன் கலந்து பேசிவிட்டு நல்ல பதில் சொல்வதாகச் சொல்லியிருக்கிறாராம்.
இதனால் விரைவில் திரையரங்குகளில் நூறு விழுக்காடு மக்களை அனுமதிக்கும் அனுமதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கை பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.











