சிம்பு இல்லாமலே மாநாடு படப்பிடிப்பு – படக்குழு அதிரடி
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துவருகிறார்கள்.
ஏற்கனவே சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நவம்பர் தொடக்கத்தில் இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் துவங்கியது.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளைப் புதுச்சேரியில் படமாக்கி வந்தது படக்குழு.புதுச்சேரியில் வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாகப் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் கூட, சிம்புவின் ஒத்துழைப்பால் ஒருநாளைக் கூட வீணாக்காமல், அரங்குகளுக்குள் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
நிவர் புயல் பாதிப்பால், பாதியிலேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை திரும்பினர். மீண்டும் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டது படக்குழு.
இந்நிலையில் ஏற்காடு மற்றும் புதுச்சேரியில் சுமார் ஒருவாரம் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
அதில் சிம்பு, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் நடிக்க வேண்டிய காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.
ஆனால், இவர்களில் ஒருவர் கூட படப்பிடிப்புக்குப் போகவில்லையாம். எல்லோருக்குமே டூப் நடிகர்களை வைத்துப் படமாக்கியிருக்கிறார்களாம்.எல்லோருடைய தேதிகள் வாங்கி அவர்களை அழைத்துப் போய் எடுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் அதிரடியாக இப்படி ஒரு முடிவை எடுத்ததாம் படக்குழு.
மலைப்பாதையில் நடக்கிற சண்டை மற்றும் துரத்தல் காட்சிகள் என்பதால் டூப் நடிகர்களை வைத்து எடுத்துவிட்டார்களாம். தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்திருப்பதால் டூப் என்று தெரியாத அளவுக்குப் படத்தைத் தொகுத்துவிட முடியும் என்பதால் இப்படிச் செய்திருக்கிறார்களாம்.











