சினிமா செய்திகள்

விஜய் 65 படப்பெயர் மோசமான முன்னுதாரணம் – விஜய்க்குக் குவியும் எதிர்ப்புகள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் பெயரும் முதல்பார்வையும் விஜய்யின் பிறந்தநாளை (ஜூன் 22,2021) முன்னிட்டு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

அதன்படி, அந்தப்படத்துக்கு பீஸ்ட் எனும் ஆங்கிலப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.விலங்கு எனப்பொருள்படும் ஆங்கிலப்பெயர் வைத்தது மட்டுமின்றி ஆங்கிலத்திலேயே அதை வெளியிட்டும் இருக்கிறார்கள்.

இதற்கு நிறைய எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

ட்விட்டரில் தமிழ்நேசி எனும் கணக்கில் வெளியாகியுள்ள பதிவில், வரிவிலக்கு கிடைக்கும் வரை தமிழில் பெயர் வைப்பது, வரிவிலக்கு இல்லையென்றால் ஆங்கிலத்தில் பெயர் வைப்பது.
“தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிர் ஏறும்” என்று பாடலுக்கு வாய் அசைத்தால் மட்டும் பத்தாது விஜய்
செயலிலும் இருக்க வேண்டும் தமிழன் என்ற உணர்வு

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதழாளர் கோபாலகிருஷ்ணன் சங்கரநாராயணன் வெளீயிட்டுள்ள பதிவில்….

விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்துக்கு Beast என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப் படங்களுக்கு/படைப்புகளுக்கு தமிழ் தலைப்புதான் வைக்க வேண்டும் என்பது அடிப்படை மொழி உணர்வு. தாய்மொழி சார்ந்த உணர்வும் பிணைப்பும் அனைவருக்கும் இருக்க வேண்டியது. அதன் வெளிப்பாடுதான் படைப்புகளுக்குத் தமிழில் தலைப்புகளை வைப்பது. இதையும் தாண்டி ஏதேனும் ஒரு வகையில் கூடுதலாக ஈர்ப்பதற்காகவும் கதையின் வசதிக்காகவும் ஆங்கிலம் உள்ளிட்ட வேற்றுமொழி சொற்களை தலைப்பாகப் பயன்படுத்துவதைப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவும் தமிழில் பேச்சுப் புழக்கத்தில் உள்ள பிறமொழிச் சொல்லாக இருக்க வேண்டும். உதாரணமாக‘Master’ என்பது ஆங்கிலச் சொல் என்றாலும் தமிழ் பேச்சு மொழியிலும் இரண்டறக் கலந்தது. ஆனால் Beast என்பது தமிழுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஆங்கிலச் சொல். அதன் பொருளையே இந்த தலைப்பு வைக்கப்பட்டிருப்பதன் மூலமாகத்தான் பலர் தெரிந்துகொள்வார்கள். இப்படி ஒரு பிறமொழிச் சொல் ஒரு உச்ச நட்சத்திர நடிகரின் திரைப்படத்துக்கு தலைப்பாக வைக்கப்படுவது மிக மோசமான முன்னுதாரணம். மொழி உணர்வு நீர்த்துப்போவதற்கான பங்களிப்பு. நோக்கம் அதுவல்ல என்று தப்பித்துக்கொள்ள முடியாது. இதைத் தவிர்க்கும் அளவுக்கு படக்குழுவில் இடம்பெற்ற யாருக்கேனும் மொழிச் சுரணை இருந்திருக்க வேண்டும்.

இதைவிட இன்னொரு கொடுமை இருக்கிறது. அண்மையில் யாரோ ஒரு திரைப் பிரபலம் முந்தைய திமுக அரசில் கொடுக்கப்பட்டதுபோல் தமிழில் தலைப்பு வைக்கப்பட்ட திரைப்படங்களுக்கு வரிச்சலுகை கொடுக்க வேண்டும் என்று புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக்கோரிக்கை ஏற்கப்படுமாயின் இந்த படத்தின் தலைப்பில் ஒரு தமிழ்ச் சொல் சேர்க்கப்படும் அல்லது பீஸ்ட் தமிழுக்கு ஏற்றவாரு உச்சரிப்பு மாற்றம் செய்யப்படும் (மாஸ் மாஸு ஆனதைப்போல்).

இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

இதுபோல் சமூகவலைதளங்களில் ஏராளமான எதிர்ப்புகளைப் பார்க்கமுடிகிறது.

Related Posts