சினிமா செய்திகள்

நடிகராகிறார் இயக்குநர் செல்வராகவன் – தனுஷ் வாழ்த்து

புது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராக்கி’. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ஆர்.ஏ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் இயக்குநர் செல்வராகவன் பல்வேறு வரவேற்புப் பெற்ற படங்களை இயக்கியுள்ள செல்வராகவன் இந்தப் படத்தின் மூலமே நடிகராக அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் – செல்வராகவன் நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ‘சாணிக் காயிதம்’ என்று பெயரிடப்பட்டு முதல்பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘சாணிக் காயிதம்’ படத்தின் முதல்பார்வையை செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

நடிகராக அறிமுகமாகவுள்ள செல்வராகவனுக்கு,உங்கள் வலிமையான நடிப்பை இந்த உலகம் காணட்டும் என்று தனுஷ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Related Posts