காட்டாளன் – திரைப்பட விமர்சனம்
வனத்தில் வாழும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை விற்பனை செய்யும் கடத்தல்காரனிடம் பணியாற்றும் கதாநாயகன் ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராகத் திரும்புகிறார்.அதற்குப்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் காட்டாளன்.
நாயகனாக நடித்திருக்கிறார் ஆண்டனி வர்கீஸ்.அவர் கடத்தல்காரராக நடித்திருக்கும் சுனிலிடம் வேலை செய்யும்போது தீவிர விசுவாசியாகவும் எதிரான பிறகு மக்களுக்கான போராளியாகவும் இருக்கிறார்.இரண்டுவித நடிப்பிலும் குறைவின்றி நிறைவாகச் செய்திருக்கிறார்.தோற்றமும் உடல்மொழியும் குறைவான வசனங்களும் அவருடைய வேடத்துக்குக் கூடுதல்பலம் சேர்த்திருக்கின்றன.
முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார் துஷாரா விஜயன்.அவருடைய தோற்றம் மிகவும் மாறுபட்ட வகையில் இருந்தாலும் தன் நடிப்புத் திறமையால் கவனம் ஈர்த்திருக்கிறார்.
வில்லன்களாக சுனில் மற்றும் கபீர் துகான் சிங் ஆகிய இருவர் நடித்திருக்கிறார்கள்.சுனில் தன் வழக்கமான நடிப்பால் கவர்கிறார் என்றால் கபீர்துகான்சிங் மிகவும் ஒயிலான நடிப்பை வெளிப்படுத்தி ஈடுகொடுத்திருக்கிறார்.
பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் ஆகிய நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒரேயொரு காட்சியென்றாலும் நடை உடை தோற்றம் ஆகியனவற்றில் கெத்து காட்டியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ரெனாடைவ் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.காட்சிகள் வடிவமைப்பும் ஒளியமைப்பும் மட்டுமின்றி நடிகர்களை மேம்படுத்திக் காட்டவும் மெனக்கெட்டிக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ரவிபஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.வாங்கிய பணத்துக்கு மேலேயே வாசித்துத்தள்ளியிருக்கிறார்.அதனால் சில காட்சிகள் இரசிக்கும்படி இருந்தாலும் பல காட்சிகள் சகிக்க இயலவில்லை.
படம் தொடக்கம் முதல் இறுதிவரை வேகமாக இருக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சமீர்முகமது.அவருடைய உழைப்பு வீண்போகவில்லை.
பவுல் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோர் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.உன்னி.ஆர் வசனங்களை எழுதியிருக்கிறார்.இவர்களுடைய எழுத்தைவிட சண்டைக் காட்சிகள் கூடுதல் இடங்கள் பிடித்திருக்கின்றன.
யானைத் தந்தம் கடத்தல் என்பது பெரும்பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் மட்டுமல்ல அதனால்,யானைகள் உலவும் வனம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? வனவாசிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்? என்பனவற்றைச் சேர்த்து திரைக்கதையை எழுதியிருப்பதன் மூலம் இது சமுதாய அக்கறையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு என நிறுவ முயன்றிருக்கிறார் இயக்குநர் பவுல்ராஜ்.
– இளையவன்











