நானும் சிங்கிள் தான் – திரைப்பட விமர்சனம்
நாயகன் தினேஷுக்கு நாயகி தீப்தியைப் பார்த்ததும் காதல். ஆனால் நாயகிக்கோ காதல், திருமணம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லை. அதனால் வேலைக்காக இலண்டன் சென்றுவிடுகிறார்.
நடுத்தர வர்க்க தினேஷும் தீப்தியைத் தேடி நண்பர்களுடன் இலண்டன் செல்கிறார். அங்கும் தினேஷை நிராகரிக்கிறார் தீப்தி. அதோடு தினேஷின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஓர் அதிரடி முடிவெடுக்கிறார்.
அம்முடிவு என்ன? அதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் நானும் சிங்கிள் தான்.
தினேஷ் வேடத்துக்கேற்ப நடிக்க முயன்றிருக்கிறார். குக்கூ படத்தின் தாக்கம் இன்னும் அவர் கண்களில் வெளிப்படுகிறது.
நாயகியாக நடித்திருக்கும் தீப்தி நன்றாக இருக்கிறார். தினேஷ் மீது கோபப்படும்போதும் அழகாக இருக்கிறார்.
தினேஷின் நண்பர்களாக கதிர், ஆதித்யா, செல்வேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உடல்மொழி கொடுத்து வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.
காதல் குருவாக மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார்.மனோபாலா, ரமா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.
டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவில் இலண்டனைச் சுற்றிக் காட்டியிருக்கிறார்கள்.
ஹிதேஷ் மஞ்சுநாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.பின்னணி இசை தாழ்வில்லை.
தொண்ணூறுகளில் பிறந்த இளைஞர்களை மையமாக வைத்து சமூகவலைதளங்களில் வருகிற நகைச்சுவைகளைப் படத்தில் வைத்திருக்கிறார். படம் நெடுக ஏகத்துக்கும் இரட்டை அர்த்த வசனங்கள்.
காதல் தொல்லைகளைத் தவிர்க்க நாயகி எடுக்கும் முடிவு புதிதாக இருக்கவேண்டும் என்பதற்காக இயக்குநர் கோபி ரொம்பவே யோசித்திருக்கிறார்.
அது கலாச்சாரத்தை மீறியதாக இருக்கக் கூடாது என நினைத்து அதிலும் ஒரு திருப்புமுனையை வைத்திருக்கிறார்.
வயது வந்தோருக்கான படம்.










