தர்ம பிரபு – திரைப்பட விமர்சனம்
தமிழில் அவ்வப்போது வெளியாகும் அரசியல் நையாண்டிப் படங்களின் வரிசையில் சேரக்கூடிய வகையில் வந்திருக்கிறது தர்மபிரபு.
சமகால அரசியல் நிகழ்வுகளை எமலோகத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
எமதர்மராஜாவாக இருக்கும் ராதாரவி, பல்லாயிரம் ஆண்டுகள் ராஜாவாக இருந்ததில் சோர்வாகி தனக்கு அடுத்து, தன் அமைச்சரவையில் இருக்கும் வெறொருவரை எமதர்மராஜாவாக நியமிக்க முடிவு செய்கிறார்.
ஆனால் அவருடைய மனைவி ரேகா, நம் மகன் தான் அடுத்த ராஜா. நம் மகனாக இருப்பதே அவருக்கான தகுதி என்று வாதாடுகிறார். அதனால் படிப்பறிவில்லாத அவர்களுடைய மகன் யோகிபாபு அரியணை ஏறுகிறார்.
அதன்பின் நடக்கும் அதகளங்கள்தாம் படம்.
எமனாக நடித்திருக்கும் யோகிபாபு படம் முழுக்க நிறைந்திருக்கிறார். அவர் அப்பாவித்தனமாகக் கேட்கும் கேள்விகள் எல்லாம் அரசியல் சவுக்கடிகள். தெனாவெட்டாகவே பேசிக்கொண்டிருக்கும் அவர் விவசாயி ஒருவர் வந்ததும் சட்டென பவ்யமாகி மரியாதையுடன் பேசுவது உட்பட நடிப்பில் பல ரசங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் யோகிபாபு.
எடுத்தவுடனே சொர்க்கத்தில் இருக்கும் கலைஞருக்கு ஜெயலலிதா வணக்கம் சொல்கிறார்.
எம்லோகமே அழிந்துவிடும் என்கிற சிக்கலான நேரத்தில் பெரியார் அம்பேத்கர் சுபாஷ்சந்திரபோஸ் காந்தி ஆகியோரை அழைத்து தீர்வு கேட்பது, எம்.எஸ்.விஸ்வநாதன் வாலி, டி.எம்.செளந்தர்ராஜன் ஆகியோரை அழைத்து பாட்டுப்பாட வைப்பது, அன்னை தெரசாவை அழைத்து பாதுகாப்பற்ற குழந்தைகளை ஒப்படைப்பது என்று இஷ்டத்துக்கு விளையாடியிருக்கிறார்கள்.
மறைந்த சோராமசாமி எப்படி அரசியல் ஆலோசகராகத் திகழ்ந்தார்? என்பதற்கு இப்படம் சொல்லும் விளக்கம் பயங்கரமாக இருக்கிறது.
படத்தின் கதைப்படி வில்லனாக வருகிற குமரதாசன் வேடம், பாமக தலைவரைக் குறிப்பது போல் அமைந்திருக்கிறது. நடிப்பில் கொடூரத்தை வெளிப்படுத்தி மேலும் பயமூட்டியிருக்கிறார், அந்த வேடத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள்.
சித்ரகுப்தனாக நடித்திருக்கும் ரமேஷ்திலக், எம்தர்மனாக ஆசைப்பட்டு செய்யும் வேலைகளில் தற்கால அரசியல் அல்லோலகல்லோலப் படுகிறது.
சிவனாக நடித்திருக்கும் நான்கடவுள் ராஜேந்திரன், அமைச்சர் செல்லூர் ராஜூ போல வயலூர் ராஜாக வருகிற போஸ்வெங்கட், சாமியாராக நடித்திருக்கும் கயல்தேவராஜ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
ஜஸ்டின்பிரபாகரன் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசை நன்று.
விஜிசதீஷின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது.
படத்தின் வசனங்களை இயக்குநர் முத்துக்குமரனும் யோகிபாபுவும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். மத்திய அரசின் இந்தித்திணிப்பு மாநில அரசின் சீர்கேடுகள் ஆகியனவற்றைத் தயக்கமின்றி திட்டியிருக்கிறார்கள்.
நாட்டில் நடக்கும் எல்லா அக்கிரமங்களையும் சொல்லிவிடவேண்டும் என்கிற வேகத்தில்.அரசியல், சமுதாயச் சீர்கேடுகள் குறித்தான விமர்சனங்கள் என எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார்கள்.
சொல்ல வந்த நல்ல விசயங்களைத் திரைமொழியில் சொல்லும் கலையில் பின் தங்கியிருந்தாலும் இயக்குநர் முத்துக்குமரனின் சமுதாய அக்கறை சிறப்பு.











