செய்திக் குறிப்புகள்

13 கோடியில் புதியபடம் – ரோமியோ பிக்சர்ஸ் தெம்பு

தமிழ்த் திரையுலகில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கிவரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்தபடம் சிறப்பான பூஜையுடன் துவங்கியது.

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்கவிழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை,தமிழ் வளர்ச்சித் துறை,செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன்,படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

குறிப்பிடத்தக்க வகையில்,அமைச்சர் ராஜ்மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார்.தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர்,அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

நிகழ்வில்,முன்னணி இயக்குநர் எச்.வினோத் மற்றும் நடிகர் ரவிமோகன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் எச்.வினோத் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹர்ஷவரதன்,இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1970-களின் தொடக்கக காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம்,குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த இலட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம்,கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.

1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை,கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாறுபட்ட கதைக்களங்களையும்,வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கிவரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்,இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்தப்படத்தின் மொத்த செலவு 13 கோடி எனத் திட்டமிட்டு தொடங்குகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.வளரும் நடிகரை இவ்வளவு செலவழிப்பது படத்தின் மீதான நம்பிக்கை காரணமாகவே என்கிறார்கள்.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related Posts