செய்திக் குறிப்புகள்

விக்ராந்த்தை பெரிய நட்சத்திரமாக உயர்த்தும் படம் தொடக்கம்

இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,ஐஸ்வர்யா ராஜேஷ்,விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18)

இப்படத்தை எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில்
தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு: வேல்ராஜ்,இசை: சாம் சி.எஸ்,பாடல்வரிகள்:இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு,எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில்,சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் – 18” (Under – 18) உருவாகவுள்ளது.புதியதலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ்,தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்கவேண்டும் என்ற நோக்கில் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

மருத்துவக் கனவுகளோடு வாழும் ஒரு அப்பாவி இளைஞன் எதிர்பாராதவிதமாக ஒரு திட்டமிடப்பட்ட க்ரைம் நெட்வொர்க்கில் சிக்கிக்கொள்ள,அவனை மீட்க அவன் தந்தையும்,தாயும் எடுக்கும் போராட்டமே “அண்டர் – 18” (Under – 18) படத்தின் மையக் கதை.குற்றஉலகின் கொடூரமுகத்தையும்,அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக இப்படம் சொல்லவுள்ளது.

இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி,தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து,உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்தப்படத்தை அவர் உருவாக்கி வருகிறார்.சமூகயதார்த்தமும்,குடும்பஉணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு,இரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.

இப்படத்தில் கிச்சாசுதீப்,விக்ராந்த்,ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் கிஷோர் சேத்தன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர்.

“Under – 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.ஓசூர்,செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.உண்மையான இடங்கள்,நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

இப்படத்தின் பூஜை விழா,படக்குழுவினருடன் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்தயாரிப்பாளர் ஜெகதீஸ் பேசியதாவது..

SR PRODUCTIONS சார்பில் இரண்டாவதுபடமான அண்டர் – 18 திரைப்படத்தின் பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள்,ஊடகநண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்.
இந்தப்படத்தின் தொடக்கத்திற்கு முக்கியகாரணமாக இருந்தவர் என் நண்பர் சாய்பரத் தான் எனக்கு இயக்குநரை அறிமுகப்படுத்தினார்.கார்த்திக் பெருமாள்சாமி அவர்கள்,இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுடன் பொல்லாதவன் முதல் அரசன் வரை முதல் உதவிஇயக்குநராகவும்,இணைஇயக்குநராகவும் பணியாற்றியவர்.அதன்பிறகு விக்ராந்த் சார் இந்தப்படத்தில் இணைந்தார்.அவர் வந்ததிலிருந்து இந்தப்படத்தை தனது தோள்களில் சுமந்து செல்லும் அளவுக்கு முழுமையாக ஈடுபட்டு,அனைத்து விஷயங்களிலும் பங்களித்து வருகிறார்.
மேலும் ஐஸ்வர்யாராஜேஷ் மேடம்,கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார்.இந்தப்படம் மூலமாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுதீப் சார் இந்தப்படத்தில் இணைந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த் சார் தான்.சார் சொன்ன ஒரு வார்த்தைக்காகவே அவர் கதையைக் கேட்க சம்மதித்தார்.கதையைக் கேட்டவுடன்,“உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டார்.நான் “ஓகே” என்றதும், “நான் இந்தப்படத்தை செய்கிறேன்”என்று உடனடியாக ஒப்புக்கொண்டார்.இன்று அவர் இந்தவிழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார்.ஆனால் கடைசிநேரத்தில் அவரது மற்றொரு படத்தின் பணிகள் காரணமாக வரமுடியாமல் போய்விட்டது.அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக அவர் கலந்து கொள்வார்.
இந்தப்படம் மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தரக்கூடிய,வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை ராதிகா பேசியதாவது..,

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அண்டர் – 18 படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெகதீஸ்,இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி,நடிகர்கள் ஐஸ்வர்யா, விக்ராந்த்,சுதீப் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த்தான்.சிறுவயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும்.சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வமும்,துடிப்பும் அவரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.அந்த ஏக்கமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துகள்.நன்றி என்றார்.

நடிகர் சரத்குமார் பேசியதாவது…

“அண்டர் – 18” எனது வயதை வைத்து வைத்த தலைப்பாக இருக்குமோ என்று இயக்குநரிடம் நகைச்சுவையாக கேட்டேன்.ஆனால் அவர் கூறிய கதையின் ஒற்றைவரி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு திரைப்படத்தை முதலில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களும் பத்திரிகையாளர்களும்தான். இந்தப்படத்தையும் நீங்கள் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கவேண்டும்.
நடிகர் விக்ராந்தின் ஆர்வம்,உழைப்பு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.‘அண்டர் – 18’ படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

நடிகர் நட்டி பேசியதாவது..,

முதலில் இந்த அண்டர் – 18… இல்லை,கூர்நோக்கு இல்லம் என்று சொல்லலாம்.இதை எல்லாரும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இயக்குநர் கார்த்திக் அவர்களுடன் பல வருடங்களாக பழக்கம்.அவர் இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பணியாற்றியவர்.அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்களுடைய சிந்தனை அலைவரிசையும் ஒன்றாக இருக்கும்.தம்பி விக்ராந்துடன் நான் இரண்டு, மூன்று படங்களில் நடித்திருக்கிறேன்.முத்துக்கு முத்தாக படத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம்.அந்த இடத்திலிருந்து இன்றுவரை நல்லஉறவோடு இருந்து வருகிறோம்.
அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ்.அவருடன் நான் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பணியாற்றியிருக்கிறேன்.மிகவும் திறமையான நடிகை.விக்ராந்த்,உங்களுக்குத்தான் பெரிய ஜாக்பாட் கிடைத்திருக்கிறது.அவ்வளவு பிரமாதமான ஆர்டிஸ்ட் அவர்.அவர் உங்களை தூக்கி சாப்பிட்டுவிடுவார் ஜாக்கிரதையாக இருங்கள்.
ஜெகதீஸ் சார் இந்தப்படத்தின் தயாரிப்பாளர். அவருடைய முந்தைய படத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது.சில காரணங்களால் அந்தப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.
இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..,

இன்று இந்தவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்த வந்துள்ள சரத்குமார்சார்,ராதிகாமேம் மற்றும் மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒருபடத்தின் புரமோஷனுக்கு இதுபோன்ற பிரபலங்கள் வந்து வாழ்த்துவது மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்.அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
கார்த்திக் பற்றி சொல்லவேண்டுமென்றால், பொல்லாதவன் உள்ளிட்ட இரண்டு,மூன்று படங்களில் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. மிகவும் திறமையான இயக்குநர்.இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பயணிப்பது சாதாரணவிஷயம் அல்ல.அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு பெரியஅனுபவமும்,கற்றலும் கிடைக்கும்.அந்தப்பயணத்தில் கார்த்திக்கும் மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது.
வெற்றிமாறன் சார் படங்களில் பணியாற்றிய கலைஞர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் ஒரு தனிஅடையாளம் கிடைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.அந்தவரிசையில் கார்த்திக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.இந்தப்படத்தின் மூலம் அவர் ஒரு பெரிய வெற்றியைப் பெறுவார் என்று நம்புகிறேன்.
விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர்.ஒவ்வொரு படத்திற்கும் தனது உடல்மொழியையும்,தோற்றத்தையும் மாற்றி முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார்.இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்தும்,பல விருதுகளை வென்றும் இருக்கிறார்.அவருக்கும் இந்தப்படம் மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும் என நினைக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும்,குறிப்பாக தயாரிப்பாளர் ஜெகதீஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது..,

விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் கடினமாக உழைக்கும் கலைஞர்.பல ஆண்டுகளாக போராடி வந்த அவருக்கு தற்போது நல்லநேரம் தொடங்கியுள்ளது.நல்லகதைகளை தேர்வு செய்து தனது வளர்ச்சியை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
இன்று சினிமாவில் கதைகள்தான் வெற்றி பெறுகின்றன. அதுபோல அண்டர் – 18 திரைப்படமும் பெரிய வெற்றி பெற்று,50 கோடி வசூலைத் தாண்டவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.இந்தக்கதையை நம்பி தயாரிக்கும் தைரியம் கொண்ட தயாரிப்பாளருக்கும், முழு படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள்.இயக்குநர் கார்த்திக்,வெற்றிமாறன் பள்ளியில் இருந்து வந்தவர் என்பதால் அவரது திறமையும் இந்தப்படத்தில் நிச்சயம் வெளிப்படும்.ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

நடிகை ஶ்ரீபிரியா பேசியதாவது..,

விக்ராந்த் அம்மாவை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும்.நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள்.அவருடைய குடும்பத்தினருடனும் எனக்கு நீண்டகால நெருக்கம் உள்ளது.மிகவும் அமைதியான,திறமையான மனிதர் அவர்.இந்தவிழாவிற்கு விக்ராந்தின் அழைப்புக்காகவே தொலைதூரத்திலிருந்து வந்தேன்.இங்கு வந்த பிறகுதான் இந்தப்படத்தின் மீதான கலைஞர்களின் அர்ப்பணிப்பையும்,சிறப்பான ஏற்பாடுகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
வாழ்க்கையில் எந்தநேரத்திலும் நல்லவாய்ப்புகள் வரலாம். தற்போது விக்ராந்துக்கு அப்படிப்பட்ட நல்ல வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன.அவரது குடும்பமும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறது.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திறமையான நடிகை.அவருக்கும்,முழுபடக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.சினிமாவுக்கு முடிவே கிடையாது;கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து பயணிக்க வேண்டும்.படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசியதாவது…,

அண்டர் – 18 படத்தின் பூஜை விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.இந்த மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு நண்பராக இருக்கும் அவர்,சிறந்த சிந்தனை,அறிவு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு கொண்டவர்.வெற்றிமாறன் சாருடன் நீண்ட காலம் பயணித்த அனுபவம் அவரை ஒரு சிறந்த இயக்குநராக உருவாக்கியுள்ளது.அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்கும் அரிய நடிகைகளில் ஒருவர்.நல்லகதைகளுக்காக காத்திருந்து படங்களை தேர்வு செய்வது அவரது சிறப்பு.இந்தப்படம் அவருக்கு மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும்.
விக்ராந்த் தனது திறமையை மட்டுமே நம்பி பயணிக்கும் கலைஞர்.எந்த பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.கதைகளை தேர்வு செய்வதிலும் அவர் காட்டும் நேர்த்தி தனித்துவமானது.இயக்குநர் கார்த்திக், விக்ராந்த்,ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் முழுபடக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அண்டர் – 18 மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேசியதாவது..,

இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.அவரது திறமையும் உழைப்பும் இந்தப்படத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.அண்டர் – 18 படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.நன்றி என்றார்.

நடிகர் தங்கதுரை பேசியதாவது..,

கார்த்திக் பெருமாள்சாமி எனக்கு நீண்டகால நண்பர். வெற்றிமாறன் சாரின் உதவிஇயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரை அறிவேன்.எப்போதும் மற்றவர்களின் படைப்புகளை பாராட்டும் நல்லமனம் கொண்டவர்.இந்தப்படத்தில் என்னையும் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அழைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
விக்ராந்த் மிகவும் திறமையான,அர்ப்பணிப்புடன் உழைக்கும் கலைஞர்.எப்போதும் பாஸிடிவாக இருப்பார். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சிறந்த நடிகை.அவருடன் இணைந்து நடிப்பதும் மகிழ்ச்சியான அனுபவம்.இந்தவிழாவில் கலந்துகொண்ட அனைத்து மூத்தகலைஞர்கள் மற்றும் நண்பர்களையும் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
அண்டர் – 18 படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும்.நன்றி என்றார்.

எழுத்தாளர் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பேசியதாவது..,

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம். கார்த்திக் என் பதினைந்து ஆண்டுகால நண்பர். அவர் ஒரு படம் இயக்கவேண்டும் என்பது எங்கள் நீண்டநாள் கனவு.அது இன்று நனவாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தக்கதையை கார்த்திக் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே எங்களிடம் கூறியிருந்தார்.அப்போதே இது ஒரு சிறப்பான கதை என்று நாங்கள் நம்பினோம்.அந்தக்கதையை இத்தனை ஆண்டுகள் மனதில் சுமந்து வந்து,இன்று தயாரிப்பாளர் ஜெகதீஸ், விக்ராந்த்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்புடன் படமாக்கியிருக்கிறார்.
சமூகத்திற்கு தேவையான ஒரு ஆழமான கருத்தை பேசும் இந்த திரைப்படம்,இந்தஆண்டின் முக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.கார்த்திக் மற்றும் முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,

விழாவிற்கு வந்துள்ள பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.நீண்டநாட்களாக ஒரு நல்லகதைக்காக காத்திருந்தேன்.அந்தக் காத்திருப்புக்கு பதிலாக அண்டர் – 18 திரைப்படம் அமைந்துள்ளது.இந்தப்படத்தின் மூலம் இரசிகர்களுக்கு ஒரு நல்லபடைப்பை வழங்க நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம்.
தயாரிப்பாளர் வெற்றி பெற்றால்தான் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமாதுறை முழுவதும் வளர்ச்சி அடையும்.அதனால் இந்தப்பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றியையும்,நல்லவசூலையும் பெற்றுத்தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.கார்த்திக் மற்றும் முழுபடக்குழுவினருடன் இணைந்து ஒரு சிறந்த படத்தை வழங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் விக்ராந்த் பேசியதாவது..,

எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.இந்தப்படம் யாருக்காக வெற்றி பெறுகிறதோ இல்லையோ,தயாரிப்பாளருக்காக கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.இன்றைய சூழலில் நல்ல தயாரிப்பாளர்களை சினிமாதுறை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. தயாரிப்பாளருக்காகவும்,இந்தப்படத்திற்காகவும் நாங்கள் அனைவரும் முழுஅர்ப்பணிப்புடன் உழைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.
இயக்குநர் கார்த்திக் மிகவும் திறமையானவர்.அவர் மிகப்பெரிய உயரத்தை அடையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.மேலும்,ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக அழைத்த உடனே கதையை நம்பி இணைந்த சுதீப் சாருக்கு சிறப்பு நன்றி.அதேபோல் ராதிகா மேம்,சரத் சார் மற்றும் இந்தவிழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் எங்களது நன்றிகள்.உங்களது ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம்.நன்றி என்றார்.

இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி பேசியதாவது..,

இந்தப்படம் இன்று இந்தநிலைக்கு வந்ததற்கு முதல் காரணம் சாய் பரத்.அவர்தான் தயாரிப்பாளர் ஜெகதீஸ் சார்,விக்ராந்த் சார் உள்ளிட்ட அனைவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல்,என் குரு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரிடமிருந்து கற்ற அனுபவம்தான் இன்று என்னை இந்தமேடையில் நிற்கவைத்திருக்கிறது.
இந்தக்கதையை நம்பி,வணிகக் கணக்குகளைப் பார்க்காமல் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜெகதீஸ் சாருக்கு என் நன்றி.அதேபோல்,ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்த விக்ராந்த் சாருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
கதையைக் கேட்டவுடன் நம்பிக்கை வைத்து இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம்,முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சுதீப் சார்,ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சார்,இசையமைப்பாளர் சாம் மற்றும் கலைஇயக்குநர் ராஜா ஆகியோருக்கும் என் நன்றிகள். நான் இன்னும் அறிமுகஇயக்குநர்தான்.இந்தப்பயணத்தில் என்னை ஆதரித்து வரும் பத்திரிகை,ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
என் அம்மாவின் நீண்டநாள் கனவான “என் மகன் இயக்குநராக வேண்டும்” என்ற ஆசை இன்று நிறைவேறியுள்ளது.அதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி.இந்தப்படத்திற்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts