விமர்சனம்

டி 3 -திரைப்பட விமர்சனம்

டி 3 என்பது குற்றாலத்தில் உள்ள ஒரு காவல்நிலையம். அங்கு காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருக்கும் நாயகன் பிரஜின், ஒரு விபத்து அதில் நேர்ந்த இளம்பெண் மரணம் குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார். அந்த விசாரணையைத் தொடங்கியதிலிருந்து பல சிக்கல்கள். அதன் உச்சமாக அவர் மனைவியும் அதேபோன்றதொரு விபத்தில் இறக்கிறார்.விபத்துகளுக்குக் காரணம் என்ன? விசாரணை முடிவு என்னவானது என்பனவற்றிற்கு விடை சொல்லும் படம் டி3.

நாயகன் பிரஜின் காவல்துறை ஆய்வாளர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்துள்ளார் என்பது தெரிகிறது. கட்டுக்கோப்பான உடல் மட்டுமின்றி கச்சிதமான நடிப்பும் அவருக்கு நல்ல பெயர் பெற்றுத்தருகிறது.

பிரஜின் மனைவியாக நடித்திருக்கும் வித்யாபிரதீப்புக்கு அதிக வேலையில்லை. ஆனால் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து கவனிக்க வைக்கிறார்.

முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் ராகுல்மாதவ் அதற்குத் தேவையான அளவு நடித்திருக்கிறார்.

இதுபோன்ற புலனாய்வுப் படங்களுக்கேற்ற ஒளிப்பதிவை மணிகண்டன்.பி.கே வும் பின்னணி இசையை ஸ்ரீஜித்தும் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரேநேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும் அந்தக்குறை தெரியாமல் அடுத்தடுத்த காட்சிகள் அமைந்திருக்கின்றன.

இருநூறுக்கும் மேற்பட்ட விபத்துகள் ஒரேமாதிரி நடப்பது யார் கண்ணையும் உறுத்தவில்லையா? என்பது உட்பட அடிப்படையான சில கேள்விகள் இருந்தாலும் அவற்றைத் தாண்டி அதற்கான காரணம் புதுமையாக இருப்பது இது மற்றுமோர் மருத்துவத்துறை குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்ற பெயர் பெறாமல் தப்புகிறது.

இயக்குநர் பாலாஜியின் எண்ணமும் பிரஜினின் உழைப்பும் படத்துக்குப் பலம்.

– சுகன்

Related Posts