கண்ணை நம்பாதே – திரைப்பட விமர்சனம்

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எம்ஜிஆர் நடித்த நினைத்ததைமுடிப்பவன் படத்துக்காக 1975 ஆம் ஆண்டு மருதகாசி எழுதிய வரி இன்றைக்கு உதயநிதி நடிக்கும் படத்தின் கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
நடுத்தரவர்க்க இளைஞரான உதயநிதி, மதுபோதையில் இருக்கும் பூமிகாவுக்கு உதவுகிறார். அது அவருக்குப் பெரும் சிக்கலாகிறது. அது என்ன சிக்கல்? அது எப்படி உண்டானது? அதற்கான தீர்வு என்ன? என்பவனவற்றைப் பரபரப்பாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் கண்ணைநம்பாதே.
பிறவியிலேயே பெரும் பணக்காரரான உதயநிதிக்கு நடுத்தரவர்க்க இளைஞர் வேடம் அவ்வளவு பொருந்திப்போகிறது.அவர் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் திடீர் திருப்பத்துக்கு யார் காரணம்? என்று தெரியாமல் தவிப்பதும் தெரிந்தபின் பொங்கியெழுவதும் இயல்பாக இருக்கிறது.
படம் முழுக்க உதயநிதியுடன் பயணிக்கும் வேடம் பிரசன்னாவுக்கு. அவருடைய அனுபவநடிப்பு இந்த வேடத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
உதயநிதியின் காதலியாக நடித்திருக்கும் ஆத்மிகாவுக்கு ஒரு பாடல் மற்றும் சிலகாட்சிகள் என வழக்கமான கதாநாயகி பாத்திரம். அதைக் குறைவில்லாமல் செய்து நிறைகிறார் அவர்.
2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜாக்கூட்டம் படத்தில் இணைந்து நடித்திருந்த பூமிகா, ஸ்ரீகாந்த் இணைக்கு இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலும் இரவில் நடக்கும் காட்சிகள். அவற்றைச் சரியான ஒளியமைப்பில் காட்சிப்படுத்தி இரசிக்கவைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜலந்தர்வாசன்.
இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம்.அதை உணர்ந்து இசைத்திருக்கிறார் சித்துகுமார்.
ஷான்லோகேஷின் படத்தொகுப்பு திரைக்கதையில் இருக்கும் தவறுகளை மறக்கடிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
அருள்நிதியை வைத்து இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இந்தப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இரவின் காதலன் ஆக இருக்கும் இவருக்கு சிலபல குறைகளைத் தாண்டி இந்தப்படமும் நற்பெயரைப் பெற்றுத்தரும்.
– அசோக்