விமர்சனம்

கோஸ்டி – திரைப்பட விமர்சனம்

முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, கிங்ஸ்லி,ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, சுப்பு பஞ்சு, சத்யன், சுவாமிநாதன், மதன் பாப், மயில்சாமி,ஆடுகளம் நரேன், தங்கதுரை, ஸ்ரீமன், சுரேஷ் மேனன் உட்பட ஏராள நடிகர்கள்.இவர்கள் மட்டுமின்றி சிறப்புத்தோற்றத்தில் ஜெய், ராதிகா ஆகியோர் வருகிறார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் பெரிய ரவுடி. காமெடி படம் என்பதால் நம்பலாம் தப்பில்லை.அவர் சிறையிலிருந்து தப்புகிறார்.தப்பியதே போதும் என்று தப்பிக்காமல் தன்னைச் சிறைக்கு அனுப்பிய காவல்துறையினரைக் கொல்லத் திட்டமிடுகிறார். அதைத் தடுத்து கடமையாற்றத் துடிக்கிறார் காவல் ஆய்வாளர் காஜல் அகர்வால்.

அதன்பின் என்ன நடக்கிறது? என்பதுதான் படம்.

நகைச்சுவைக்கதை என்பதால் லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது என்பார்கள். அதனால் அதைப்பார்க்காமல் காட்சிகளாகப் பார்த்துச் சிரித்துவிட்டு வரலாம்.

நாயகி காஜல் அகர்வால் காக்கிச்சட்டை அணிந்திருந்தாலும் அதற்கான கம்பீரம் குறைவுதான்.ஆனால் சிரிப்புக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது.காவல்துறை ரவுடி என்று மட்டும் இருந்தால் போதாதென காஜல் அகர்வாலுக்கு பேய்களால் தொல்லை என்றொரு ட்ராக் இருக்கிறது.

கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உட்பட எல்லோருமே அனுபவமிக்க நடிகர்கள் என்பதால் இந்தத் திரைக்கதையின் தன்மை புரிந்து நடித்திருக்கிறார்கள்.

ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசையில் ஏமாற்றவில்லை.

ஏற்கெனவே குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண், சிரிப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து இயக்கியிருக்கிறார்.

அவருடைய எண்ணத்துக்கேற்ப படம் அமைந்திருக்கிறது. சில இடங்களில் சோதித்தாலும் பல இடங்களில் சிரித்துவிட்டு வரலாம்.

– குமார்

Related Posts