விமர்சனம்

எட்டுத்திக்கும் பற – திரைப்பட விமர்சனம்

சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் திவ்யா காதல் திருமணம் மற்றும் அதையொட்டி நடந்த நிகழ்வுகளின் காட்சி வடிவமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் வ.கீரா.

அதை மட்டும் நேரடியாகச் சொல்லிவிடாமல், வெவ்வேறு வயது, வெவ்வேறு மதம், வெவ்வேறு வர்க்கம் ஆகிய பின்புலங் கொண்ட காதல் இணைகளை வைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

காதல் இணைகளாக நடித்திருக்கும் சாந்தினி சஜூமோன், நித்தீஷ் வீரா சவுந்திகா தீக்கதிர் குமரேசன் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் நடிப்பு இயல்பாக இருக்கிறது.

இந்த காதல் இணைகள் ஒரேநாளில் அதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாளொன்றில் திருமணம் செய்ய முயல்கின்றன. அதையொட்டி பல்வேறு அரசியல் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

சமுத்திரக்கனி வழக்குரைஞர் வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கென அளவெடுத்துத் தைத்த சட்டை போல அவருடைய வேடம் அமைந்திருக்கிறது. அம்பேத்கர் என்கிற பெயர் அப்பாத்திரத்துக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.

முத்துராமனின் பாத்திரப்படைப்பு தற்கால தமிழக அரசியல்வாதியை நினைவூட்டுகிறது.

சிபின்சிவனின் ஒளிப்பதிவு கதைக்கேற்ப அமைந்திருக்கிறது. இரவுக்காட்சிகளில் ஒளியமைப்பு நன்று.

எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையில் உசுருக்குள் உன்னை வைத்தேன் பாடல் ரசிக்க வைக்கிறது. 

எழுதி இயக்கியிருக்கும் வ.கீரா,உயர்ந்த சாதி என்பவர்கள் தாழ்ந்த சாதி என்பவர்களைவிடப் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியிருக்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பதன் மூலம் பணக்காரர் ஆனாலும் சாதிச்சிக்கல் சும்மா விடாது என்பதைச் சொல்லியிருக்கிறார்.

கதை, காட்சியமைப்பு, வசனங்கள் ஆகியனவற்றில் இயக்குநருக்கு இருக்கும் வலிமை திரைக்கதை அமைப்பிலும் திரைமொழியில் வெளிப்படுத்தும் வகையிலும் இல்லை என்பது பலவீனம்.

Related Posts