இதயம் முரளி வெற்றி – டான் பிக்சர்ஸின் பயணம் தொடருகிறது
தனுஷ் இயக்கி நடித்த இட்லிகடை,சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடித்த பராசக்தி ஆகிய படங்களைத் தயாரித்த நிறுவனம் டான் பிக்சர்ஸ்.அண்மையில் வெளியான இதயம் முரளி படத்தையும் அந்நிறுவனமே தயாரித்திருந்தது.அதைவிட அந்நிறுவனத்தின் உரிமையாளரான ஆகாஷ் பாஸ்கரனே அந்தப்படத்தை இயக்கியிருந்தார்.ஜூலை 10 ஆம் தேதி வெளியான இதயம் முரளி,வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுவருகிறது.
இந்த டான் பிக்சர்ஸ் நிறுவனம்,சிம்பு,கயாடுலோகர் உட்பட பலர் நடிக்கும் எஸ்டிஆர் 49 மற்றும் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஆகியனவற்றைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால்,கடந்த ஆண்டு அந்நிறுவனம் திடீரென அமலாக்கத்துறை சோதனைக்கு ஆளானது.அதனால் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உடனடியாகத் தொடங்கவிருந்த சிம்பு படம் தடைபட்டது.
அதன்பின்,சில மாதங்களில் சட்டப்போராட்டம் நடத்தி மீண்ட டான் பிக்சர்ஸ் நிறுவனம்,தடைபட்டிருந்த இதயம் முரளி படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தியது,அப்படத்தை வெளியிட்டு வெற்றியும் கண்டிருக்கிறது.
இதற்கிடையே சிம்பு படம் தடைபட்டு அதனால் அவர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்துக்குப் போய்விட்டார்.அதோடு,தனுஷும் இந்த நிறுவனம் இனி படம் தயாரிக்க வரமாட்டார்கள் என முடிவுசெய்துவிட்டார்.அதனால்,இந்நிறுவனம் தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட தமிழரசன் பச்சமுத்து படத்தை தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மூலமே தயாரிக்க முடிவு செய்துவிட்டார் என்று செய்திகள் வந்தன.
அதன்பின் அப்படம் பற்றி எவ்வித தகவலும் இல்லை.
இப்போது,இதயம் முரளி வெற்றிக்குப் பின்னர் தெம்பாகிவிட்ட ஆகாஷ் பாஸ்கரன்,தனுஷ் தமிழரசன் பச்சமுத்து இணையும் படத்தை தாங்களே தயாரிப்பதாகவும் நீங்கள் எங்களுக்கு தேதி கொடுத்தால் போதும் என்று தனுஷிடம் கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அதை தனுஷும் ஏற்றுக்கொண்டாராம்.எனவே,அந்தப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள்.
தனுஷ் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஓம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்துவிடும்.இப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே,இப்படம் முடிந்ததும் அடுத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்துக்கே அவர் தேதி கொடுப்பார் என்கிறார்கள்.
அறிமுகமாகும்போதே தனுஷ் படம் சிவகார்த்திகேயன் படம் சிம்பு படம் என்று அதிரடியாக அறிமுகமான டான் பிக்சர்ஸ் பயணத்தில் பெரிய தடைக்கல் ஏற்பட்டது.
இதயம்முரளி படத்தின் வெற்றி அந்தப் பெரிய தடைக்கல்லை உடைத்து அந்நிறுவனத்தின் பயணத்தை மீண்டும் முழுவீச்சில் தொடர வழிவகை செய்துள்ளது என்கிறார்கள்.











