உறுதியாகிறது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணி
2020 சனவரியில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அவருடைய அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.நடுவில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது.
ஒரு குரங்கை மையமாக வைத்து அனிமேசன் படம் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடந்தபாடில்லை.
இதற்கிடையே தெலுங்கு மற்றும் இந்தியில் படங்கள் இயக்கப்போகிறார் என்றும் அது சம்பந்தமான வேலைகள் நடக்கின்றன என்று சொல்லப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து அவர் ஒரு படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.
சிவகார்த்திகேயனின் மான்கராத்தே படத்தின் தயாரிப்பில் பங்குபெற்று அப்படம் பெரிதாக உதவியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அப்போதிருந்தே அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்கிற செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இப்போது அது உறுதியாகவிருக்கிறது என்கிறார்கள்.
மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தைத் தயாரித்த பி.மது தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கான தொடக்கக் கட்டப் பேச்சுகள் வெற்றிகரமாக நடந்துமுடிந்திருக்கிறதாம்..
இன்னும் சில நாட்களில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்றன என்றும் அவையும் வெற்றிகரமாக நிறைவடைந்தால் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.











