சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெளியிட திடீர் நிபந்தனை – திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி

பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாதம் 23 ஆம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் இந்தப்படத்தைக் கட்டாயம் பார்த்துவிடுங்கள் என்று விஜய் இரசிகர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபக்கம்,அவர் இப்போது முதலமைச்சராகவும் இருப்பதால் இப்படத்தை தமிழ்நாட்டிலுள்ள எல்லாத் திரையரங்குகளிலும் திரையிட்டாக வேண்டும் என்கிற முனைப்புடன் படக்குழு செயல்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.அதற்கேற்ப,திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் தற்போது நடந்துவருகின்றனவாம்.

அவ்வளவு திரையரங்குகளிலும் படத்தைத் திரையிட்டு கூட்டம் வராவிட்டால் அசிங்கமாகப் போய்விடும் என்கிற அச்சமும் அவர்களுக்கு இருந்திருக்கிறது.அதன்விளைவே அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்,ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை ஒரு திருவிழா போல் கொண்டாடவேண்டும் என்று சொல்லியிருந்தார்.இது சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கினருக்கு உத்வேகம் கொடுத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில்,ஜனநாயகன் படத்தை உங்கள் திரையரங்கில் திரையிட வேண்டுமெனில் இவ்வளவு முன்பணம் கொடுக்கவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்படுகிறதாம்.இதனால் திரையரங்கினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதன்விவரம்…

ஜனநாயகன் படம் சனவரி 9 ஆம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அப்போதே தமிழ்நாடு முழுக்க இப்படத்தை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டனர்.அவர்களும் தத்தம் பகுதிகளில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலைகளையும் அப்போதே செய்திருந்தார்கள்.

திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை என்பதால் அந்தப்பேச்சு அப்படியே முடிந்துபோனது.இப்போது மீண்டும் திரையரங்குகள் ஒப்பந்தம் நடக்கத் தொடங்கியிருக்கிறது.

பொதுவாக இதுபோன்ற பெரியபடங்கள் வரும்போது அப்படங்களின் விநியோகஸ்தர்கள்,திரையரங்குக்காரர்களிடம் முன்பணம் வசூலிப்பது வழக்கம்.அவர்கள் கொடுக்கிற தொகையைத் தாண்டி வசூலானால் மீதித் தொகையை விநியோகஸ்தர்களுக்குக் கொடுப்பார்கள்,ஒருவேளை முடிவு மாறிவிட்டால்,வசூலான தொகை போக மீதியை விநியோகஸ்தர்கள் திரையரங்கினருக்குக் கொடுக்கவேண்டும்.

இந்தப்படத்துக்கு சனவரியில் பேசியபோது,ஒரு திரையரங்கிடமிருந்து இருபது இலட்சம் முன்பணம் வேண்டும் என்று கேட்ட விநியோகஸ்தர் இப்போது இன்னும் ஐந்து இலட்சம் கூடுதலாகக் கொடுத்தால்தான் உங்களுக்குப் படம் தருவோம் என்று சொல்கிறார்களாம்.ஏன் என்று கேட்டால்?சனவரியில் இன்னொரு படமும் வருவதாக இருந்தது இப்போது இந்தப்படம் மட்டும்தான் வருகிறது.அதோடு அவர் முதல்வராக இருப்பதால் அவர் கட்சிக்காரர்களே எல்லா சீட்டுகளையும் வாங்கிக் கொள்வார்கள்,எனவே,முன்பு பேசியதைவிட கூடுதலாக ஐந்து இலட்சம் கொடுத்தால் படம் தருகிறோம் இல்லையெனில் உங்களுக்குப் படமில்லை என்று சொல்கிறார்களாம்.

இதனால்தான் திரையரங்குக்காரகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.இந்தப்படம் இணையத்தில் வெளியாகி ஒருகோடிப்பேர் பார்த்துவிட்டார்கள் என்று சொல்லப்படும் நேரத்தில் ஏற்கெனவே சொன்ன தொகையைவிடக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்க நினைத்தால் அதற்கு நேர்மாறாக இன்னும் அதிகம் கேட்கிறார்களே?அவ்வளவு பணம் வசூலாகுமா? என்கிற அச்சம் திரையரங்குக்காரர்களுக்கு இருக்கிறது.இதனால்,இதனை முன்வைத்து விநியோகஸ்தர்களிடம் சமரச பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.முடிவு என்னாகும்? என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.

Related Posts