சினிமா செய்திகள்

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் ஆகஸ்ட் 14 இல் வெளியீடு – அதிரடி முடிவு

பாடலாசிரியராக புகழ்பெற்ற விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஹாய்’.இப்படத்தில் நயன்தாரா,கவின்,கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார்,பிரபு,விடிவி கணேஷ்,சத்யன்,அமிர்தா சீனிவாசன்,ஆதித்யா கதிர்,பெப்சிவிஜயன்,காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.

குடும்பப் பொழுதுபோக்குப் படமாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் – தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

இப்படத்தில் இடம்பெற்ற ‘கன்னக்குழியா பொத குழியா குழப்புறியே எனத் தொடங்கும் முதல்பாடல் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.இந்தப்பாடலை படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன் எழுத ஜிவி.பிரகாஷ் குமார் பாடியிருந்தார்.அப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

அதன்பின் அப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இப்போது திடீரென படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டார்கள்.அதன்படி,இப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா,மமிதா பைஜு உட்பட பலர் நடித்திருக்கும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகஸ்ட் 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூர்யாவின் முந்தைய படமான கருப்பு,மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதால் அடுத்து அப்படத்துக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் வெளியாகும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

அப்படம் வெளியாகும் நாளிலேயே இந்தப்படத்தையும் வெளியிடுவது என்று படக்குழு முடிவெடுத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஹா படம் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான எல்ஐகே மற்றும் இந்தப்படம் ஆகிய இரண்டையும் செவன் ஸ்கிரின் நிறுவனமும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றன.எனவே, அந்தப்படத்தின் ச்வரவு செலவுகள் இந்தப்படத்தின் வரவு செலவுகள் ஆகியன இரண்டறக் கலந்து பெரும் குழப்பத்தில் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டது.இந்தப்பட உருவாக்கம் திட்டமிட்டதைவிட தாமதம் ஆனதற்கு அதுவே காரணம் என்றும் சொல்லப்பட்டது.ஒருகட்டத்தில் இந்தப்படம் நடக்காது என்றுகூடச் சொன்னார்கள்.

அவை எல்லாவற்றையும் தாண்டி படம் முழுமையாகத் தயாராகியிருக்கிறது.இந்நிலையில் படத்தைப் பார்த்த அனைவருக்கும்,படம் நல்லா வந்திருக்கு என்கிற மகிழ்ச்சி.

அதன் காரணமாகவே,சூர்யா படத்துடன் வந்தாலும் இந்தப்படமும் வரவேற்புப்பெறும் என்று நம்பி படத்தை வெளியிடவிருக்கிறார்களாம்.

நம்பிக்கை வெல்லட்டும்.

Related Posts