சினிமா செய்திகள்

குறைந்த காலம் அபார வளர்ச்சி திடீர் மரணம் – ஜே.கே.ரித்தீஷ் பற்றிய தொகுப்பு

நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று (ஏப்ரல் 13,2019) திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48.

கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து இருக்கிறார். அண்மையில் வெளியான எல்.கே.ஜி. படத்திலும் நடித்துள்ளார்.

அவர் நடிகராக இருந்த போதும் அரசியல்வாதியாக இருந்த போதும் அனைவருக்கும் வாரி வழங்கிய வள்ளலாகவே வாழ்ந்தார்.

தியாகராய நகரிலுள்ள ஃபெலித்தா எனும் மலேசிய உணவகம் அவரால் புகழ் பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

2007 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆன அவர் இரண்டாண்டுகளுக்குள்ளாகவே திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

முகவை குமார், சிவக்குமார் மற்றும் ஜே.கே.ரித்தீஷ் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்ட இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2014 வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.

இதன் பின்னர் தி.மு.க.வில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அ.தி.மு.க.வில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளராக பதவி வகித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த சில நாட்களாக தேர்தல் பணியாற்றிய ரித்தீஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இராமநாதபுரம் வந்தார்.

பின்னர் இராமநாதபுரத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சத்திரக்குடி, போகலூர், மணக்குடி பகுதிகளில் நேற்று காலை முதல் தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

மதிய உணவுக்காக ராமநாதபுரம், ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். சாப்பிட்டபின் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். அவருக்கு இதய துடிப்பு இருப்பதாக உறவினர்கள் கூறியதையடுத்து மீண்டும் மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து இராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அங்கு திரளாகக் கூடி அஞ்சலி செலுத்தினர்.

மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோசன், ஹாரிக் ரோசன் ஆகிய 2 மகன்கள் மற்றும் தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளது.

ரித்தீசின் தந்தை குழந்தைவேலு இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். நயினார்கோவில் அருகே உள்ள மணக்குடி அவரது சொந்த ஊர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்த ரித்தீஷ், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவியவர். சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்றிருந்தார்.

தற்போது மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த ரித்தீஷ் தேர்தல் பணிக்காக இராமநாதபுரம் சென்றிருந்தார். சென்ற இடத்தில் திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் இருந்து இராமநாதபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

இன்று அவருடைய உடல் அடக்கம் நடைபெறும்.

ஜெ.கே.ரித்தீஷின் மறைவு திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரங்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரித்தீஷ் மறைவு தொடர்பாக, இயக்குநர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜே கே ரித்தீஷ் மறைவால் தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாகக் கருதுகிறேன்.

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

வாழ்க்கை எப்படி முன் கணிக்க முடியாததாகிவிடுகிறது. என்னால் என் நண்பன் ஜே.கே.ரித்தீஷ் மரணத்தை நம்பமுடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. நடிகர் சங்கத் தேர்தலின் போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்துக்கு மனவலிமையைக் கொடுக்குமாறு கடவுளைப் பிராத்திக்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடிகரும், முன்னாள் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் ( எ ) சிவகுமார் காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர் அரசியலிலும், திரைத்துறையில் நடிகராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டவர்.

ஜே.கே.ரித்தீஷ் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.

அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரது இழப்பால் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்கள் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ஜே.கே. ரித்தீஷின் திடீர் இறப்பால் அதிர்ச்சியடைந்து நொறுங்கிவிட்டேன். இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு வயது 48 தான் ஆகிறது. இவ்வளவு சிறு வயதிலா மரணம்? அவர் எனக்கு சகோதரர் போன்றவர். பலரது வாழ்க்கையை மாற்ற உதவியவர். வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

உங்களை ரொம்பவே இழக்கிறேன் சார். என்னை உங்களது சகோதரன் போல் நடத்தினீர்கள். ‘எல்.கே.ஜி’ படத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தீர்கள். அன்பும், அக்கறையும், நேசமும் மிக்கவர். நீங்கள் ஒரு மிகப்பெரிய மனிதர். மூன்று குழந்தைகளுடன் கூடிய உங்கள் அழகான குடும்பத்திலிருந்து கடவுள் உங்களைக் கொண்டு சென்றது கொடூரம் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘எல்.கே.ஜி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஜே.கே.ரித்தீஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் இது என்பது நினைவுகூரத்தக்கது.

இன்று (ஏப்ரல் 14) எல்கேஜி திரைப்படம் சன் தொலைக்காட்சியில் முதன்முறை ஒளிபரப்பாகவிருக்கிறது.

Related Posts