February 12, 2025
சினிமா செய்திகள்

தக் லைஃப் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது – விவரம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்,கமலின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துவந்தது.இதுவரை சுமார் தொண்ணூறு நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.இப்போது படப்பிடிப்பு முழுமையடைந்து விட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது.இது தொடர்பாக படக்குழு ஒரு காணொலியை வெளியிட்டு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் நடக்கும் என்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிவடைந்ததும் கமல் வெளிநாடு சென்று விட்டார்.அவர் திரும்பி வர சில மாதங்கள் ஆகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.அப்படியானால் தக் லைஃப் படத்தில் அவருடைய குரல்பதிவு செய்வது தாமதம் ஆகுமே என்றால்? அதுதான் இல்லை.

கமல் படப்பிடிப்பை முடித்தவுடனே அவர் நடித்த காட்சிகள் விரைவாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.அவற்றைப் பார்த்து அவை திருப்தியாக அமைந்திருந்ததால் இரவோடிரவாக அக்காட்சிகளுக்குக் குரல்பதிவு செய்து கொடுத்துவிட்டாராம் கமல்.

முதல்பாதிப் படம் வரை ஏற்கெனவே குரல்பதிவு செய்துவிட்டதால் மீதியை விரைவாகப் பதிவு செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது என்று அறிவித்திருந்தாலும் அதில் முழு உண்மையில்லையாம்.

இன்னமும் படத்தில் இடம்பெற வேண்டிய ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம்.அப்பாடலில் த்ரிஷா மட்டும் பங்குபெறவிருக்கிறார்.அப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை இருக்கும் என்கிறார்கள்.

அவருடைய தேதிகள் உடனடியாகக் கிடைக்காததால் அதன் படப்பிடிப்பை நடத்தக் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும் என்று சொல்கிறார்கள்.அக்டோபர் இறுதி அல்லது நவம்பரில்தான் அந்தப் படப்பிடிப்பு நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அதற்குள் முழுமையாகப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவித்தது ஏன் என்றால்?

படத்தின் வியாபாரத்தைத் தொடங்கிவிட்டார்கள்.முதற்கட்டமாக இணைய ஒளிபரப்பு உரிமையைப் பெரிய விலைக்கு விற்றுவிட்டதாக அவர்கள் தரப்பிலிருந்தே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வியாபாரங்களும் பேசப்பட்டுவருகின்றன.வியாபாரம் பேச வருகிறவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கும் என்பதற்காக படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதென அறிவித்திருக்கிறார்களாம்.

Related Posts